Stories Trending

கொடூர கொரோனா – தப்பிப்பது எப்படி??

உலகம் முழுவதும் இன்று ஒரே குரலாக ஒலித்து கொண்டிருப்பது கொரோனா வைரஸ்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த கொடிய அரக்கன் இன்று ஆக்கிரமித்து இருப்பது உலகம் முழுவதும் 159 நாடுகளை!!!

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்ற கேள்வி எழுவதற்குள் தனது வக்கிரத்தை பரப்பிவிட்டது இந்த கொரோனா வைரஸ்.

நோயை குணமாக மருந்து கண்டுபிடிப்பதற்குள் 10000-ற்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கிவிட்டது இந்த நோய் கிருமி..

மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தும் இந்த நோய் இன்று வரை உலகம் முழுவதும் 2 லட்சத்தி 49 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது…

நோயால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதும், தும்மும் போதும் நீர் திவலைகள் மூலமாக நேரடியாக பரவும் இந்த வைரஸ் கிருமி, அந்த நீர்த்திவலைகள் பதிந்த பொருட்களை தொடும் போது கைகள் மூலமாகவும் மற்றவர்களிடம் பரவுகிறது.

காற்று மூலம் பரவும் இந்த கிருமி இரண்டிலிருந்து 14ம் நாளில் தனது வேலையை காட்ட தொடங்கி விடும். நோய் பாதித்த ஒருவர் காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலினால் அவதிப்படுவது இந்நோயின் தாக்கத்தை உறுதி படுத்தும்.

பயோ வார் எனப்படும் உயிரியல் யுத்தத்திற்க்காக உருவாக்கப்பட்ட ஆதீத அறிவியலின் வெளிப்பாடுதான் இந்த கொரோன வைரஸ் என்று பலர் கூறி வந்தாலும், அதை உருவாக்கிய நாடு என சந்தேகித்த நாடுகள் இன்று உயிரிழப்புகளையும், மில்லியன் கணக்கில் பண இழப்புகளையும் சந்தித்து உள்ளன..

பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, உற்பத்திகள் நிறுத்தப்பட்டு விட்டன, விமான போக்குவரத்து நிறுவனங்கள் விழி பிதிங்கி நிற்கின்றன, இறுதியாக சரணடையும் இறை ஆலயங்கள் கூட தங்கள் கதவை இப்பொழுது மூடி விட்டன…

மருந்து கம்பெனிகளின் மூலாதாரமான இத்தாலியில் அதிக பேர் உயிர் இழந்து இருப்பது மிக பெரிய அச்சத்தை உலகம் முழுவதிலும் உண்டாக்கியுள்ளது.

பல நாடுகளில் தனது பாதிப்பை பதித்து விட்டு கொரோனா இப்பொழுது தடம் பதித்திருப்பது உலகின் இரண்டாவது மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்.

இன்றைய தேதிப்படி 195 பேருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகலாம் என்பதே உண்மை… ஆனால் வெப்ப மண்டலத்தில் கொரோனாவின் வீரியம் குறையும் என்பதும், சுக்கு இஞ்சி மஞ்சள், துளசி இருப்பதால் கொரோனா நம்மை நெருங்காது என்பதும் எந்த அளவு உண்மையோ, அதே அளவு நமது அலட்சியமும்….

தமிழகத்தை  பொறுத்தவரை வீண் அச்சம் வேண்டாம் என்று சொல்லப்பட்டாலும், வீண் அலட்சியம் வேண்டாம் என்பதே உண்மை..

அதிகம் மக்கள் நடமாடும் இடங்களை சற்று தவிர்த்து, கை கால்களை வெளியில் சென்று வந்தால் கழுவுவது, அடிக்கடி கண், காது, மூக்கை தொடாமல் இருப்பது, நாளொன்றுக்கு இரண்டு முறை குளிப்பது, தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டை உபயோகிப்பது, நெருக்கமாக நின்று பேசுவது போன்ற தற்காத்து கொள்ளும் முறைகள் மூலம் கொரோன வைரஸிடமிருந்து நம்மை வருமுன் காத்து கொள்ளலாம்…

ஒருவேளை தொடர் சளி மற்றும் இருமல், தொடர் காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்த ஆலோசனை.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் பாதிக்கும் வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களிடம் தோற்று விடுகிறது என்பது நம்பி கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 100 வயது முதியவர் முறையாக தரப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் காரணமாக 13 நாட்களில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்..

வெளியில் சென்று வந்தால் காய் கால் கழுவி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும் என்பதும், இரு கரம் கூப்பி வரவேற்பதும், சுத்தம் சோறு போடும் என்பதும் நம் மூத்தோர் வாக்கு… ஒவ்வொரு முறையும் தமிழர்களின் பெருமையையும், உணவு முறையையும் குறித்து பெருமை கொள்ளும் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்றுகிறோம்..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கீரை, துளசி, இஞ்சி, வெங்காயம், பூண்டு, மஞ்சள், கிழங்கு வகைகள், தயிர், நீர் ஆகாரம் என பாரம்பரிய உணவுகளை உணவில் சேர்த்து கொள்வதும், சுத்தமாக இருப்பதும் இன்றைய நோய் தாக்குதலில் இருந்து நம்மை காத்து கொள்ள உதவும்.

ரோட்டில் எச்சில் உமிழ்வதும், கண்ட இடங்களில் அசுத்தம் செய்வதும், கேட்டால் உன் வீட்டில் செய்கிறேனா என்று எதிர் கேள்வி கேட்டு நாகரிகம் மறந்த, சுத்தமில்லா  சிலருக்கு பாடம் புகட்டவே இது போல வைரஸ் அரக்கர்கள் தோன்றி மறைகின்றனர் போலும்…

சுத்தம் சோறு போடும், அந்த உணவே நமக்கு மருந்தாகும்…