Suryan Explains Videos

நம் உடலும் ஓர் அமைச்சரவையை!

”விசையுறு பந்தினைப் போல் உள்ளம் மேவியபடி செல்லும் உடல் கேட்டேன்,” என்று பாரதி சொன்னதும்,

”காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” என சித்தர்கள் சொன்னதும்,

”காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா” என கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னதும்…

மனித பிறவியில் உயிரின் கூடாகவும், உணர்வுகளின் வீடாகவும் விளங்கும் உடலை பற்றியும், உடல்நலம் பற்றியும் தான்..

கட்டடத்துக்கு நல்ல அஸ்திவாரம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு அவனது உடல் நலம்.

சமையல் சரியில்லை என்றால் ஒரு நாள் துன்பம், அறுவடை சரியில்லை என்றால், நான்கு மாத துன்பம்.

ஆனால் உடம்பு சரியில்லை என்றால், ஆயுள் முழுவதும் துன்பம்.

உடம்பின் முக்கியத்துவத்தை திருமூலரும் தனது திருமந்திரத்திலேயே விளக்குகிறார்,

”உடம்பினை முன்னும் இருக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!” என்று…

நோய் வந்தால் பூனை, நாய், கோழி ஆகியன கூட அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைக் காணலாம். 5 அறிவி ஜீவன்கள் கூட, தங்கள் உடல்நலத்தையில் அக்கறை காட்டும் போது, 6 அறிவு பெற்ற நாம் நம் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தராமல் இருக்கலாமா?

‘சுவை’ பார்த்து சாப்பிட்ட காலம் அன்று..

சுகர் பார்த்து சாப்பிடும் காலம் இன்று…

உணவே மருந்தாய் இருந்தது அன்று..

மருந்தே உணவாக இருப்பது இன்று…

உடல்நலத்தை காப்பதில் உணவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று அன்று சித்தர்கள் சொன்னார்கள்

“ஒரு வேளை உண்பான் யோகி

இரு வேளை உண்பான் போகி

மூவேளை உண்பான் ரோகி”

உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன். அவன் யோகி – அதிர்ஷ்டசாலி.

ஒரு நாளில் இரண்டு வேளை உண்பவன்  வசதியாக, சுகமாக வாழ்கிறவன்  போகி.

ஒரு நாளில் மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான்  என சித்தர்கள் உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைத்தனர்.

“பசியெடுத்த பின் கையை வாய்க்குள் கொண்டு போகிறவனும், பசியடங்குவதற்குள் கையை வாயை விட்டு எடுப்பவனும், என்றைக்கும் நோய்வாய்ப்பட மாட்டான்,” என கவிப்பேரசு வைரமுத்து கூறுவார். எப்போதும் வயிற்றை அரைவயிறு உணவாலும், கால்வயிறு தண்ணீராலும், கால் வயிற்றை காலியாகவும், வைத்திருக்க வேண்டுமென்பார்கள்.

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் மேதையான அறிஞர் விஸ்வேஸ்வரய்யா 103 ஆண்டு வாழ்ந்தவர். 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ, அவர் கூறும் யோசனைகளில் முதன்மையானது அளவோடு சாப்பிடு என்பது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமை பெற, அமைதி பெற உடற்பயிற்சி ஆகச்சிறந்த ஒன்று என்கிறது அறிவியல்.

உடற்பயிற்சி என்றால் ஜிம்க்கு தான் செல்ல வேண்டும் என்று அல்ல.  யோகா செய்யலாம், சூரியநமஸ்கரம் மிக சிறந்த ஆசனம். உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக இந்த ஆசனம் செயல்படுகிறது.

நடைப்பயிற்சியும் உடற்பயிற்சி தான்.  நடைப்பயிற்சியை உடற்பயிற்சிகளின் அரசன் என்பார்கள்.

அரிது அரிது மானிடராதல் அரிது என அவ்வை சொல்வது போல், நம் மானிட உடலை  ஒரு அமைச்சரவைக்கு ஒப்பாக சொல்லலாம்.

மூளை என்பது முதலமைச்சர். தலை – கல்வி அமைச்சர்,

கண் – சட்ட அமைச்சர், காது – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,

மூக்கு – சுகாதாரத்துறை அமைச்சர், பல் – மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், கைகள் – தொழில் துறை அமைச்சர்,

இதயம் – நிதி அமைச்சர், வயிறு – உணவுத்துறை அமைச்சர்,

தோல் – பாதுகாப்பு அமைச்சர், கால் – போக்குவரத்துத்துறை அமைச்சர், நுரையீரல் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என,

உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகள் செய்யும் பணிகளை ஒவ்வொன்றாக பிரித்து சொல்லலாம்.

நல்ல உடல் நலம் தானாக கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ராபர்ட் ஸ்கல்லர் சொல்வது போல், ”நல்ல உடல் நலத்தை, ஒரு பயணம் என்கிறார். நலமான உடலில் தான் நல்ல மணம் இருக்கும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும்.

இனி மறப்போம் கவலையை, வாழ்வோம் சிறப்போடு..!

About the author

Deepan

I am a scriptwriter and visual editor.

Add Comment

Click here to post a comment