வாழ்க்கை எப்போதும் புதிர்களாலும் திருப்பங்களாலும் நிறைந்த, ஒரு திகில் பயணம். எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கும். இந்த பரமபத விளையாட்டில் தப்பி பிழைப்பவர்களின் சதவிகிதம் மிகக் குறைவாகவே இருக்கும்.
பொருளாதார சரிவுகள், உறவுகளின் இழப்புகள், அந்தஸ்துகளின் தரைமட்டம், குடும்பப் பிரச்சினைகள் என ஒவ்வொரு மனிதனும் சந்திக்கின்ற சோதனைகள் அதிகம். உச்சத்தில் இருப்பவர்கள் பள்ளத்தாக்குகளில் விழும் இந்த சறுக்கு விளையாட்டில் மிக முக்கியமான பங்கை வகிப்பது நோய்கள்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நம்மை துவளச் செய்து மீளா துயரில் தள்ளும் காரணங்களில் தீரா நோய்களின் வலிமையும் பாதிப்பும் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட பெரும் நோய்களில் உலகின் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பது கேன்சர் என்னும் புற்றுநோய் .
உலக அளவில் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துவதில் இந்த புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். வருடம் தோறும் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் புற்றுநோய் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கிறது. 70 சதவீதத்திற்கு அதிகமான புற்றுநோய் இறப்புகள் வறுமை மற்றும் வளரும் நாடுகளில் தான் நிகழ்கிறது.
புகையும்; மதுவும், சத்துணவின்மையும், மரபணு காரணிகளும் புற்று நோய்க்கான 40% காரணங்களாக இருக்கிறது. இந்த கொடும் நோயை எதிர்த்து உலகம் முழுவதும் 16 ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் வருடம் தோறும் செலவிடப்படுகிறது. உடலின் ஒரு இடத்தில் தோன்றி உடலின் பல பகுதிகளுக்கும் பரவும் இந்த கொடூர நோயை எதிர்த்து உலகம் தினம் தினம் போராடிக் கொண்டு தான் இருக்கிறது.
அறுவை சிகிச்சை; ரேடியோ தெரபி; கீமோ தெரபி; இமனோ தெரபி; ஹார்மோன் தெரபி; ஜெனி தெரபி என எத்தனையோ முறைகளில் இந்த புற்று நோய்க்கான தடுப்பு வழிகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி வேகமாக பரவி வரும் இந்த கொடிய நோயை தடுக்க 2000வது ஆண்டில் பாரிஸ் நகரில் பிப்ரவரி 4ம் தேதி புற்று நோய்க்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை நினைவு கூறும் வகையிலும், போதிய விழிப்புணர்வு மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் , முன் தடுப்பு முறைகளை கையாள அறிவுறுத்தல் செய்யும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி உலக புற்று நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அப்படி இந்த வருடம் “Close The Care Gap” அதாவது புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இடைவெளியை குறைப்போம் என்ற முழக்கத்துடன் இந்த வருட “புற்றுநோய் தினம் ” பிப்ரவரி நான்காம் தேதி அனுசரிக்கப்படுகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நமது முன்னோர்களின் பொன்மொழி. அது எவ்வளவு நிதர்சனம், உண்மை என்பது இப்போதுதான் நம்மில் பலரும் உணர்கின்றோம்.
எனவே புற்றுநோய் குறைப்பில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்முடைய உண்மையான அக்கறையான பங்களிப்பை அளிப்போம். நோயற்ற உலகத்துக்கான நம்பிக்கையை விதைப்போம்.