வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ‘AK’. இயக்குனர் விஷ்ணுவர்தன் என்பது முடிவான பிறகு படத்திற்கான கதை பற்றிய விவாதம் நீண்டது. காரணம் தொடர் தோல்விப் படங்கள்… அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களின் Trendsetter ஆக இந்த படம் அமைய போகிறது என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆம் Superstar-ன் Cult Classic மூவீயான ‘பில்லா’ வை ரீமேக் செய்ய திட்டமிட்டு படக்குழு அதற்கு உரிய அனுமதி பெற்று களமிறங்கியது. திரைக்கதையை வடிவமைக்கும்போது பழைய தாக்கம் தெரியக் கூடாது என்பதில் முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக கேமரா, காஸ்ட்யூம், சண்டைக் காட்சிகள், பாடல்கள், பின்னணி இசை, வசனங்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர் அஜித்தும், விஷ்ணுவர்தனும்.
படம் ‘பர்ஃபெக்ட்’ என்றவுடன் இசைக்கு முடிவு செய்யப்பட்டவர் யுவன். லவ்வர் பாய் அஜித் என்ற காலகட்டத்திலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறிய Transformation திரைப்படமான ‘தீனா’வில் யுவனின் பங்கும் இருந்தது, தீனாவுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் இணைந்தார், யுவன். ஒட்டுமொத்த சினிமாவும் கலர்ஃபுல்லாக இருந்த நேரத்தில் இந்தப் படமோ வேறு லைட்டிங்கிலும், க்ரேஸ்கேல், சேப்பியா டோன் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக வரும் அஜித்தின் சில காட்சிகளில் மட்டுமே கலர் விஷூவல் இருக்கும்.
டானாக வரும் அஜித் கதாபாத்திரம் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலுமே கறுப்பு, வெள்ளை, க்ரே போன்ற கலர்கள் மட்டுமே இருக்கும். அதுவே படத்தை வேறொரு பரிமாணத்தில் காட்டியது.
முதல் 40 நிமிடக் காட்சிகளில் ’AK’ பேசும் வசனங்கள் குறைவுதான். ஆனால் தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொன்றும் பன்ச். ராஜ் கண்ணன் எழுதிய வசனங்கள் அனைத்துமே அஜித்துக்காகவே செதுக்கப்பட்டது போல இருந்தன. அடுத்ததாகப் படத்தின் காஸ்ட்யூம்… அஜித்தின் ஸ்டைலான தோற்றத்துக்கு ஏற்றக் காஸ்ட்யூம்கள் கொடுத்து அசத்தியிருந்தார் அனு, அவருக்கு இதுதான் முதல் படமும் கூட.
அஜித்குமாருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நடிகர்களுக்குமே காஸ்ட்யூமுக்காக மெனக்கெட்டிருந்தார் அனுவர்தன். அஜித் நடந்துவரும் ஒவ்வொரு சீனும், நிரவ் ஷா ஒளிப்பதிவுக்கு ஏற்றாற்போல பின்னணி இசையில் மிரட்டியிருப்பார் யுவன். அத்தனை காட்சிகளும் பக்கா மாஸாக இருந்தது. இன்றளவும் பில்லா தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. முந்தைய 6 வருடங்களில் தொடர் தோல்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு யாரும் அசைக்க முடியாத வெற்றியைக் கொடுத்தது பில்லா. அதன் பின்னர் இனி அஜித் அவ்வளவுதான் என யாருமே பேசமுடியாத படியான வெற்றியாக அது இருந்தது.
அஜித்தின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.`ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா’ என்று வாயைப் பிளந்தது கோலிவுட், அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களையும் கட்டிப்போட்டது பில்லா. சினிமாவில் மட்டும் அஜித் டானாகவில்லை… அந்தப் படத்துக்குப் பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய டான் ஆனார், அஜித்குமார்.
பில்லா படம் வெளியாகி இன்றுடன் (டிசம்பர் 14, 2007) 16 ஆண்டுகள் ஆகின்றன. இன்டர்வெல் பிளாக்கில் AK பேசும் `I AM BACK’ வசனம், படத்துக்கு மட்டுமல்ல அவரது தோல்விகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கான பதிலடியாகவும் இருந்தது. Yes, He is Back… தோல்வியில் இருந்து அவர் மீண்டு வந்ததுக்கு காரணம் அவருடைய ‘விடா முயற்சியே’…