Specials Stories

90’s Kids வாழ்க்கையில் கலந்திருக்கும் யுவன் சங்கர் ராஜா!

Yuvan

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நிகழ்ச்சியில் அரங்கம் முழுவதும் அதிரும்படி பார்வையாளர்கள் ஒரு பெயரை கத்தி சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் எனில் அது பெரும்பாலும் கதாநாயகர்களுக்காக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு கதாநாயகர்களுக்கம் ஒரு தனி ரசிகர் வட்டம் இருக்கும்.

ஆனால் நாம் பார்க்கப் போகும் நபரோ கதையின் நாயகன் கிடையாது. ஆனாலும் அவர் பெயர் அரங்கத்தில் ஒலிக்க ஆரம்பித்து விட்டால் அரங்கமே அதிரும். அவரது பெயர் இடைவிடாது அரங்கம் முழுக்க சில நிமிடங்களுக்கு எதிரொலித்துக் கொண்டே இருக்கும். கதாநாயகர்களை கூட வெறுக்கும் கூட்டம் உண்டு, ஆனால் இவரை யாராலும் வெறுக்க முடியாது.

90’s kids அனைவரது வாழ்விலும் இசையின் வழி ஊடுருவி தனக்கென தனியொரு இடத்தை ஆக்கிரமித்திருப்பார் இவர். நீங்கள் ஒரு 90’s kid எனில் ‘யுவன் சங்கர் ராஜா’ நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் கலந்திருப்பதை உணர முடியும்.

குறிப்பாக பதின் பருவத்தில் காதலித்த 90s kids-களுக்கு யுவனின் இசைதான் எல்லாமும். முதல் காதல், காதல் பிரச்சனை, காதல் தோல்வி என எந்த சூழலிலும் யுவனின் இசை பொருந்திப் போகும். உதாரணமாக துள்ளுவதோ இளமையில் ‘கண் முன்னே எத்தனை நிலவு’, ‘இது காதலா முதல் காதலா’ பாடல்கள் அனைத்து இளம் வயதினரையும் காதலால் கட்டிப்போட்டது. அதே போல் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களை கேட்டு காதலிக்காதவர்கள் கூட காதலை உணர்ந்தார்கள்.

இப்படி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சிம்பு உடன் மன்மதன், வல்லவன் என வேறு மாதிரியான இசையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி அஜித் உடன் யுவன் இணைந்தால் போதும் அந்த படத்தின் BGM எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்து நாட்களை எண்ணத் தொடங்கி விடுவார்கள்.

மேலும் சென்னை 28, சரோஜா படங்களில் நண்பர்களுக்கென தனித்துவமான பாடல்கள், பார்ட்டி சாங்ஸ் என மிரட்டியிருப்பார். இப்படி ஒரு பக்கம் என்றால் பருத்தி வீரன், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கழுகு என குறிப்பிட்ட மண் சார்ந்த கதைகளுடனான இவரது இசை இன்னொரு அழகான பரிணாமத்தை இவருக்கு கொடுத்தது.

அதுமட்டுமல்ல இயக்குனர் அமீரின் ராம் … இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு… இயக்குனர் செல்வராகவனின் புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களில் முற்றிலுமாக உடைந்து போன நிலையில் உள்ள மனங்களை தேற்றும் படி யுவனின் இசை அமைந்திருக்கும்.

இதுதான் யுவனை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கான மிக முக்கிய காரணம். நிறைய பேரின் வாழ்வில் நேரும் சோகத்தை கடப்பதற்கு யுவனின் இசை பெருந்துணையாக இருந்தது, இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் புதுப்பேட்டை படத்தில் இடம்பெறும் ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது’ பாடல். வாழ்க்கையே சூன்யமானது என நினைப்பவர்கள் கூட இந்த பாடலை கேட்டால் மனம் மாறி விடுவார்கள்.

யுவனின் பாடல்கள் இத்தனை பேரின் இதயங்களை இப்படி ஆக்கிரமித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் பாடல்களில் இடம் பெறும் வார்த்தைகள். யுவனின் ஹிட் பாடல்களில் பெரும்பாலும் வார்த்தைகளை கோர்த்தவர் நா.முத்துக்குமார். இவர்கள் இருவரும் இணைந்தாலே கண்களை மூடிக் கொண்டு இந்த பாடல் நிச்சயமாக ஹிட் ஆகும் என சொல்லி விடலாம்.

இப்படியாக வாழ்வின் அனைத்து சூழலிலும் யுவனின் இசை பொருந்திப் போவதால் தான் அவர் இத்தனை மனங்களை ஆட்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரை எப்படி வெறுக்க முடியும். இதனால் தான் யுவனின் இசையை ரசிகர்கள் ‘Drugs’ என்றும், யுவன் சங்கர் ராஜாவை ‘Drug Dealer’ என்றும் சொல்கிறார்கள்.

முகமூடி படத்தில் வரும் மிஷ்கின் எழுதிய ‘நாட்டுல நம்ம வீட்டுல’ பாடலில் ‘ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா இந்த சாராயம் மருந்தாக மாறுது’ என ஒரு வரி இடம்பெற்றிருக்கும். அதே போல யுவன் ரசிகர் ஒருவர் ஒரு பேட்டியில் ‘சந்தோஷமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி அவரோட பாட்ட தான் கேட்போம்’னு கூறியிருப்பார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த 25 ஆண்டு கால இசை பயணத்தில் இதற்கு மேல் வேறு என்ன அங்கீகாரம் வேண்டும். எந்த விருதும் இந்த வார்த்தைகளுக்கு ஈடாகாது.

இன்னும் பல மேடைகள் யுவனுக்காக காத்திருக்கின்றன. அந்த மேடைகளில் யுவன் கால் பதிக்கும் போது அரங்கங்கள் அதிர அவரது பெயர் எதிரொலிக்கும். ரசிகர்களின் இந்த அன்பை ஈடு செய்ய எப்பொழுதும் யுவன் கூறுவது இந்த வார்த்தைகள் மட்டுமே, யுவனிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் இந்த வார்த்தைகளை மட்டுமே ‘love you, love you, love you, love you all’.

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.