மலைத் “தேன்” சுவைபோல் மலை வாழ் மக்களின் கதை சொல்லும் “தேன்” இனிமையானது. தமிழ் சினிமால இப்போ பழைய படங்கள ரீரிலீஸ் பண்ணி கொண்டாடுறது ரொம்ப அதிகமாய்டுச்சு, அதே போல மற்ற மொழி படங்களையும் நம்ம ரசிகர்கள் அதிகமா கொண்டாடுறாங்க, சமீபகாலமா தமிழ் சினிமால எங்க நல்ல படம் வருது..? மலையாள சினிமா பாருங்க கம்மி பட்ஜெட்ல எவ்வளோ நல்ல படங்கள் தராங்கனு சொல்றாங்க.
ஆனா அதே ரசிகர்கள் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற படங்கள் வரும்போது எங்க போறாங்கனு தெரியல! அப்படி 2021 மார்ச் 19 ரிலீஸ் ஆகி பலர் கொண்டாட தவறின ஒரு திரைக்காவியம் தான் “தேன்”. இந்த படத்த முழுசா பார்த்தா கண்டிப்பா உங்க கண்கள் கலங்கும், ஏன்னா அந்தளவு கதையோட நாம ஒன்றிப் போய்டுவோம்.
தேனி பக்கம் குரங்கனி மலைப்பகுதியில வாழ்ற மக்கள் இயற்கையோட ஒன்னோட ஒன்னா சந்தோஷமா வாழ்ந்துட்டு வராங்க. இந்த கதையோட நாயகன் தருண்குமார் (Sulile Kumar) “வேலு”ன்ற கதாபாத்திரம் பண்ணியிருப்பாரு, நாயகி அபர்ணதி “பூங்கொடி”ன்ற கதாபாத்திரம் பண்ணியிருப்பாங்க. ரெண்டு பேரும் ஒரு கதாபாத்திரத்துக்கு எந்தளவு உயிர் கொடுக்க முடியுமோ அந்தளவு வாழ்ந்திருப்பாங்க.
முக்கியமா இந்த படத்தோட கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு டைரக்டர் கணேஷ் ஒரு பக்கம் கலக்கியிருக்கார்னா, மறுபக்கம் கேமராமேன் தன்னோட பங்குக்கு திரைக்குள்ளையே நம்மல கூட்டிட்டு போயிருப்பாரு. வேலு மலைபிரதேசத்துல தேன் எடுக்குற வேலை பாக்குறவரு, பூங்கொடி பக்கத்து ஊருல விறகு எடுக்கறது, வயல் வேலைனு பாக்குறவங்க.
தன்னோட அப்பாக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்துல வைத்தியர் குறிஞ்சி தேன் கேட்க, அத வாங்க வேலுவ பாக்க போன பூங்கொடிக்கு வேலுவோட அறிமுகம் ஆகுது, குறிஞ்சி தேன் எடுத்துட்டு பூங்கொடி ஊருக்கு போன வேலு, அவங்களோட அப்பாக்கு அவரே மருந்து கொடுத்து உடல்நிலைய சரியாக்குறாரு.
இப்படி திரைக்கதை நகர பூங்கொடிக்கு வேலு மேல காதல் வருது, அத வேலுகிட்ட சொல்லி வேலுவும் அத ஏத்துக்குறாரு. இன்னொரு பக்கம் மலைபிரதேசத்துல இருக்க மக்கள, டவுனுக்கு கொண்டு வரவும், அவங்க வாழ்க்கை தரத்த உயர்த்துரோம்னு சொல்லி சில பின்னணி திட்டங்களோட அரசு அதிகாரிகள் வராங்க, அத ஏத்துக்காம அவங்கள ஊர் மக்களும், வேலுவும் பேசி அனுப்பிடுறாங்க.
அடுத்து வேலு தன்னோட சொந்தங்களோட பூங்கொடிய பொண்ணு கேட்க வர, ஊர் வழக்கப்படி வாழ மட்டய பிரிச்சு பார்த்தா, சரியா வரல. அதனால இந்த ஜோடி சேரக் கூடாது, சேர்ந்தா ஒரு உயிர் போகும்னு சொல்லி பிரியுறாங்க, ஆனா பூங்கொடி வேலுவ தேடி வந்து ஒன்னு சேர்ந்து வாழ்க்கைய தொடங்கி அவங்களுக்கு ஒரு மகளும் பிறக்குறா, வளர்றாங்க இதெல்லாம் கவிதையா ஒரு பாடல்ல இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பாரு.
இங்க தான் முக்கிய கதை தொடங்குது. பூங்கொடிக்கு வேலைக்கு போற சமயத்துல ஒரு நாள் பயங்கர வயிறு வலி வருது, ஊர் வைத்தியர் டவுன் போக சொல்றாங்க, ஏகப்பட்ட ஸ்கேன் எடுக்க வேலுகிட்ட காசும் இல்ல, அரசு காப்பீட்டுத் திட்டங்கள் சலுகைய வாங்க கார்டும் இல்ல, அடுத்து காப்பீடு திட்டம் கார்டு வாங்க ரேஷன் கார்டும் இல்ல, அத வாங்க ஆதார் இல்ல. இபடி அவதிப்படுறாரு.
இன்னொரு பக்கம் வயிறு வலிக்கான காரணம் தெரியவருது. பூங்கொடிக்கு வயிறு வலி வர காரணம் அந்த ஊர் தண்ணில ஒரு கம்பெனியோட கெமிக்கல் ஏதோ கலந்திருக்கும், அத பத்தி நியாயம் பேச வந்த சமூக ஆர்வலரும் பணம் வாங்கிட்டு போய்டுவாரு. ஒரு பக்கம் வயிறு வலியில துடிச்சி அரசு மருத்துவமனைல படுக்க படுக்கை இல்லாம பாய்ல படுத்து இருக்க பூங்கொடி, மறுபக்கம் ஒவ்வொரு கார்டும் வாங்க அலையோ அலைனு ஓடிட்டு இருக்க வேலு.
இதெல்லாம் படம் பாக்குற நம்ம மனசையே கரைச்சிடும், வேலு ஆதார் எல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வரும் போது, பூங்கொடி அங்க இறந்து போய் இருக்க, இறந்த உடல எடுத்துட்டு போக ஆம்புலன்ஸ் கூட வரலனு டவுன்ல இருந்து தன்னோட ஊரு வரைக்கும் பூங்கொடியோட உடல மூட்டைபோல கட்டி தூக்கிட்டு நடந்து போவாரு.
இத மொத்த மீடியா, வாட்ஸ்அப், ட்விட்டர்னு எல்லா பக்கமும் பேசுவாங்க, ஆனா யாரும் உதவ வரல, கடைசியா தன்னோட மனைவிய மலை மேல கொண்டு போய் குழி தோண்டி தான் வாங்கின ஆதார் காட்டையும் அதோட போட்டு புதைப்பாரு. மலைவாழ் மக்கள் வாழ்க்கைல படுற கஷ்டத்த சொல்ல இந்த ஒரு காட்சி போதும்.
இத திரைல பாத்த, இப்ப படிக்குற நமக்கே கஷ்டமா இருக்குனா இதெல்லாம் நிஜமா அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும். டிஜிட்டல் இந்தியால வாழ்றோம், ஆனா இன்னும் எல்லாருக்கும் எல்லாமே போய் சேருறதில்ல. இத ரொம்ப சரியான திரைக்கதைல டைரக்டர் சொல்லியிருப்பாரு. தேன் பல விருதுகள உலகளவுல வென்று இருக்கு, ஆனா இன்னும் நம்ம ஊருல பல மக்கள போய் சேரல, இப்ப பிரபல OTT தளத்துல தேன் திரைப்படம் இருக்கு கண்டிப்பா பாருங்க.