சில கதைகளும், திரைப்படங்களும் சில பாடல்களும் காலம் கடந்தும் நம் மனதை விட்டு அகலாமல் நம் நெஞ்சுக்குள் பதியம் போட்டு அமர்ந்திருக்கும். காரணம் அவை நம் இதயங்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்.
அப்படி நம் நினைவுத் தொட்டிலில் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு படம் தான் 96. 22 வருட நினைவுகளை வெறும் 20 நாட்களில் எழுத்தாக்கி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2015-ல் சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்த கதை வெள்ளத்தால் சூழ்ந்தவர் தான் பிரேம்குமார் சந்திரன். 96 படத்தின் கதாசிரியர் மற்றும் இயக்குனர்.
கதைக்களம் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆரம்பிக்கிறது. அங்கு தான் நம் கதை நாயகன் ராம் என்கின்ற ராமச்சந்திரனின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன. அவனது பள்ளிக்கால நண்பர்கள், அவனுக்கு விருப்பமான அவன் விரும்பிய ஜானு என்கின்ற ஜானகி இவர்களை நினைத்து பின்னோக்கி பயணிக்கிறது அவனது ஞாபகங்கள்.
தான் உருகி உருகி காதலித்த காதலிதான் ஜானு. கால சுழற்சியில் தற்போது இவன் இங்கு ஒரு பயண புகைப்பட கலைஞனாக இருக்கிறான். ஜானு சிங்கப்பூரில் இருக்கிறாள். அவள் நினைவாகவே இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறான் ராம். இந்த சமயத்தில்தான் மீண்டும் பழைய பள்ளி தோழர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
இதற்காக சிங்கப்பூரிலிருந்து வருகின்ற ஜானு, ராமை சந்திக்கின்ற பொழுது தான் தெரிகிறது… அவன் இன்னும் இவள் நினைவாகவே இருப்பது. படத்தின் முடிவில் அவனுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிவிட்டு கனத்த மனதோடு மீண்டும் அவள் சிங்கப்பூர் செல்ல, இங்கே ராம் தனியாக அதே நேரத்தில் ஒரு புது மனிதனாக வாழத் தொடங்குகின்றான் என்பதில் படம் முடிகிறது.
ஐந்து வருடங்கள் கழித்தும் இந்த கதை ஏன் இன்னும் கொண்டாடப்படுகிறது என்றால், பதின் பருவம் முளை விடுகின்ற காலத்தில் பூக்கின்ற முதல் காதல் எல்லோருக்கும் பள்ளியில் தான் ஆரம்பிக்கும். அப்படி வருகின்ற அந்த முதல் காதல் பலருக்கும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத சந்தோஷங்களையும் புதிய ஆர்ப்பரிப்புகளையும் புதுவிதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் என எத்தனையோ விஷயங்களை கொடுத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக யாரிடமும் சொல்ல முடியாத ஓர் அமைதியான வலியை கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.
வரும்போது வரமாகவும் பிரியும்போது சாபமாகவும் இருக்கின்ற அந்த மௌனம் பூசிய காதல் வலி காலம் கடந்து இன்றும் நம் மனங்களில் மையம் கொண்டுதான் இருக்கிறது. அந்த வலிகளையும் காயங்களையும் கண்ணீரையும் சொன்ன 96 திரைப்படம், காலம் கடந்தும் நம் இதயங்களில் உள்ள காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டுதான் இருக்கும்.
2018 அக்டோபர் மாதம் நான்காம் தேதி ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் இதே நாளில் தான் இந்த படம் வெளியானது. இந்தப் படம் வெளியானது முதல் உலகமெங்கும் பலராலும் பாராட்டப்பட்டது. தமிழில் வந்த இந்த படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஏனென்றால் ’காதல்’ மொழிகள் கடந்து எல்லைகள் கடந்து உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. அதனால் தான் இந்த படம் இன்றும் கொண்டாடப்படுகிறது.