இயக்குனர் H. வினோத்தின் முதல்படமான சதுரங்க வேட்டை வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது. வித்தியாசமான கதைக் களமும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டது சதுரங்க வேட்டை.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடராஜ் கதாநாயகனாகவும் இஷாரா நாயர் கதாநாயகியாகவும் நடித்திருப்பர். இவர்களுடன் இணைந்து பொன்வண்ணன், இளவரசு, பிறைசூடன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தயாரித்துள்ளார்.
பல்வேறு பொய்களைச் சொல்லி பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் மூளைக்கார திருடனாக நடராஜின் காந்தி பாபு கதாபாத்திரம் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒருவன் வாழ்க்கையின் அர்த்தத்தை எப்படிப் புரிந்து கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம்.
குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவில்லை. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்த 5 பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்தின் கதைக்கு ஏற்ப பொருந்தி மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.
இது போன்ற வித்தியாசமான கதைக்களம் உடைய படங்களை மக்கள் ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. அந்த வகையில் சதுரங்க வேட்டை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. இப்படம் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இரண்டாவது தமிழ் திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு H.வினோத் கார்த்தி, அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் அரவிந்த்சாமி மற்றும் திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை நிர்மல் குமார் இயக்கி வருகிறார். H. வினோத்தின் கதையில்தான் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியின் எதிரொலியாக இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போலவே விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.