ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி 2 காஞ்சனா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே லாரன்ஸ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த காஞ்சனா.
காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், ராய் லட்சுமி, கோவைசரளா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, தேவன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க வெற்றி மற்றும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்தனர். 2011ஆம் ஆண்டின் சிறந்த திகில் படமாக காஞ்சனா திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இப்படத்தில் சரத்குமார் ஏற்று நடித்த காஞ்சனா எனும் திருநங்கை கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு பெரிய நடிகரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், ஆனால் சரத்குமார் இந்த கதாபாத்திரத்தை துணிந்து ஏற்று நடித்தது பாராட்டக்கூடிய விஷயமாகும். திருநங்கைகளுக்கும் இந்த சமூகத்தில் ஆண் பெண்ணிற்கு இணையான உரிமையும் மரியாதையும் கொடுக்க வேண்டுமெனும் எனும் கருத்தையும் இப்படம் வலியுறுத்தி இருக்கும்.
சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட காஞ்சனா மற்றும் அவளது குடும்பத்தினர் மீண்டும் அமானுஷ்ய சக்தியாக வந்து லாரன்ஸ் உடம்பில் புகுந்து எப்படி அந்த கொலையாளிகளை பழி வாங்குகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம். இப்படத்தில் திகில் காட்சிகள் மட்டுமின்றி நகைச்சுவை காட்சிகளும் அதிகம் இடம் பெற்றிருக்கும். குழந்தைகள் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதையும் கதை நகரும் அமைந்திருப்பது இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. மக்கள் கொண்டாடும் கதைகள் எப்போதும் தோற்றுப் போகாது என்பதற்கு இப்படம் எடுத்துக்காட்டாக அமைந்தது. இப்படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.
இப்படம் தமிழில் வெளியான அதே சமயத்தில் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரு மொழிகளிலுமே இப்படம் வெற்றியடைய கன்னடத்தில் “கல்பனா” எனும் பெயரில் ராமநாராயணன் இயக்கத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. சிங்கள மொழியில் “மாயா” எனும் பெயரில் 3டி தொழில் நுட்பத்துடன் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெங்காலி மொழியில் “மாய பினி” எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் இப்படத்தை தானே இயக்கி ஹிந்தியிலும் ரீமேக் செய்துள்ளார். “லக்ஷ்மி பாம்” என்னும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமனின் இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. குறிப்பாக சங்கிலி புங்கிலி மற்றும் கருப்பு பேரழகா பாடல்கள் கேட்கும் அனைவரையும் துள்ளாட்டம் போட வைத்தது என்றே கூறலாம். இப்படத்தின் தொடக்கத்தில் அமைந்தான் “நில்லு நில்லு” பாடலை ராகவா லாரன்ஸ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் மட்டுமின்றி இப்படத்தின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்து தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு திகில் அனுபவத்தை கொடுத்தது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சரத்குமாருக்கு கிடைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முனி மற்றும் காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றி அடைந்தன. இப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை சினிமா ரசிகர்கள் #9YearsOfKanchana இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.