Cinema News Interview Stories

நான் உடல் எடையை குறைத்ததற்கு காரணம் சிம்பு கொடுத்த ஐடியா தான்! – பாலா சரவணன்

Bala-Saravanan

நடிகர் பாலா சரவணன் சமீபத்தில் நடந்து முடிந்த சூரியன் FM நேர்காணலில் நிறைய சுவாரசியமான விஷயங்களை கூறினார்.

அப்போது 75 நாட்களில் 22 கிலோ உடல் எடை குறைத்த ரகசியம் குறித்து கேட்டதும் பதிலளிக்க ஆரம்பித்த அவர், “டான் படத்திற்காக தான் முக்கியமாக எடையை குறைத்தேன். டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் என்னுடைய கதாபாத்திரத்திற்காக கண்டிப்பாக உடல் எடையை குறைத்தே ஆக வேண்டுமென கூறினார்.

சிவகார்த்திகேயன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இவர்கள் இருவரும் தான் உடல் எடையை குறைப்பதற்கு மிக முக்கிய காரணம். உடல் எடையை குறைப்பதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிம்பு அண்ணா தான். ஏனெனில் ஈஸ்வரன் படத்தில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்திற்கு விதவிதமான உணவுகள் வரும். நாங்கள் அனைவரும் நன்றாக சாப்பிடுவோம். ஆனால் அவரோ எதுவும் சாப்பிடாமல், ஏதோ ஒரு ஜூஸ் குடித்துக் கொண்டிருப்பார்.

Image

அப்பொழுது, எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகிறது, நானும் டான் படத்திற்காக உடலை குறைக்க வேண்டும் என்ன செய்வதென தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு அவர், இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் ஒரு நடிகனாக நம் தொழிலுக்கு நாம் செய்யும் மரியாதை என கூறினார். அது எனக்கு உத்வேகத்தை அளித்தது.

மேலும் ஒரே ஒரு விசயத்தை மட்டும் கடைபிடியுங்கள். நாம் சினிமாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு வேளையும் பசியே தெரியாத அளவுக்கு நன்றாக சாப்பிடுகிறோம். ஆனால் டயட் இருக்கும் போது பசி எடுக்கும். அப்போது நாம் அதனை வெறுப்போம். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் பசியை ரசிக்கத் தொடங்குங்கள். இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் அதை மட்டுமே மனதில் வைத்து 75 நாட்களில் 22 கிலோ குறைத்தேன்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், மேலும் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo