நடிகர் பரத் தனது 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் பரத் நடித்துள்ளார்.
2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் தான் பரத்திற்கு முதல் படம். அதன்பின் மலையாளத்தில் 4 the people திரைப்படத்தில் பரத் நடித்தார். இந்த இரு படங்களிலுமே பரத் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் நாயகனாகவே நடித்தார். அதன்பின் விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் பரத் நடித்தார்.
முதன்முதலில் கதையின் முன்னணி நாயகனாக பரத் நடித்த படம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பட்டியல் எம்.மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம் எனத் தொடர்ந்து பல படங்களில் பல பரிமாணத்தில் பரத் நடித்தார். பரத்தின் காதல் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே பரத் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
ஜாக்பாட் எனும் ஹிந்தி படம் மூலம் பரத் பாலிவுட்டில் கால் தடம் பதித்தார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி திரைப்படம் பரத்தின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திரையுலக வாழ்க்கையில் வெற்றிகளும் தோல்விகளும் கலந்து கடந்து வந்த பரத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
சைக்காலஜிக்கல் திரில்லராக வெளிவந்த காளிதாஸ் திரைப்படத்தில் பரத் முதல்முதலில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்தார். 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பரத் வெவ்வேறு கதை கலங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். பரத்தின் நடிப்பில் 8, நடுவன் ஆகிய படங்கள் மேலும் வெளிவர இருக்கின்றன.
நடிகர் பரத்திற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.