ஒரு பெயர் அனைவரையும் மெய் சிலிர்க்க செய்யும் என்றால் அதற்கு உரித்தான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். உள்ளூரில் தொடங்கிய இவரின் கல்விப் பயணம் உலக அரங்கிலும் தொடர்ந்து நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. மக்களின் அறியாமையையும் மூட நம்பிக்கையும் மக்கள் மனதில் இருந்து அடியோடு வேரறுக்க வேண்டும் என்று போராடியவர்..!
சமத்துவம் வீசும் காற்றில் பரவட்டும் என்று உரக்க முழங்கியவர். சாதிய ஒடுக்கு முறையினால் பாடசாலையில் இருந்து விரட்டப்பட்ட 5 வயது சிறுவன் பின்னாளில் 50 வயதில் உலகின் அதிக பக்கங்களை உடைய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் ஆனார். அவர்தான் அறிஞர் அம்பேத்கர்.
சட்ட நிபுணர், பொருளாதார வல்லுனர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, மாந்தவியலாளர், நூலாசிரியர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், சமூக அறிவியலாளர், கல்வியாளர், சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர், தத்துவவாதி என பல பரிணாமங்களிலும் பகுத்தறிவால் பல மாற்றங்களை மக்களிடத்தில் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டு, கல்வி கற்பது மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என்பதை பாமர மக்கள் மனதிலும் பதிய வைத்த இவரை… கல்வி கற்கக் கூடாது என்று சொன்னவர்கள் மத்தியில் திறம்பட படித்து எண்ணிலடங்கா பட்டங்களை பெற்றுக் காட்டினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை சத்தமாக இளைஞர்களின் மனதில் பதிய வைத்து தீண்டாமை ஒழிப்பிற்காக பல இன்னல்களை கடந்த பேரறிஞர்.
“The Problem Of Rubee” என்ற நூலை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனமான “Reseve Bank Of India” உருவாக காரணமாய் இருந்த அண்ணல் அம்பேத்கருக்கு இந்திய அரசின் மிக முக்கியமான விருதான பாரத ரத்னா விருது வழங்கி நமது இந்திய அரசு சிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே அவர் சொந்தம் அல்ல… ஆறறிவு பெற்ற அனைவருக்கும் அவர் சொந்தம். கூண்டில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியவர் அல்ல… கூண்டோடு கொண்டாடப்பட வேண்டியவர் அவர்…