‘சின்ன கலைவாணர்’ விவேக் அவர்களின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர். கலைத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாக விவேக் அவர்களின் இழப்பு பார்க்கப்படுகிறது.
மரங்கள் நடுவதில் நடிகர் விவேக்கிற்கு அக்கறையும் ஆர்வமும் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது மறைவுக்கு பின் இளைஞர்கள் அவரை கௌரவப்படுத்தும் வகையில் தொடர்ந்து மரங்களை நட வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினருடன் மரங்கள் நடுவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்பதிவில் அவர் ” எங்களை ஊக்குவித்ததற்கு நன்றி விவேக் சார்” என குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவை நெட்டிசன்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அருண் விஜய் தனது தந்தையான நடிகர் விஜய்குமாருடனும், தனது மகனுடனும் இணைந்து மரக்கன்றுகளை நடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அருண் விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரது இந்த செயல் பலரையும் மரங்கள் நட ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர் விவேக் தனது வாழ்நாளில் சுமார் 33.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்நாள் கனவான 1 கோடி மரங்கள் நடுவதை இளைஞர்கள் நிறைவேற்றி அவரின் நல்லுள்ளத்திற்கும், இந்த உலகிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
நடிகர் அருண் விஜயின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.