சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 40 விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.
2022ஆம் ஆண்டு நடக்கவிருந்த இந்த போட்டி கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெற்றது .
இந்திய சார்பில் 655 விளையாட்டு வீரர்கள் இதில் பங்குபெற்றார்கள். கடந்த 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்களாக இருந்தது. எனவே இந்த ஆண்டு அந்த சாதனையை இந்தியா முறியடித்து அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பரப்பாக இருந்தது.
அதற்கு தகுந்தாற் போல் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் இறங்கினர், 70 பதக்கம் என்ற முந்திய சாதனையை கிட்டத்தட்ட போட்டி முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே முறியடித்த இந்தியா 100 பதக்கம் என்ற இலக்கை நோக்கி சென்றது. அதே போல் மகளிர் கபடியில் இந்தியா வென்ற தங்கம் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 100வது பதக்கமாக அமைந்தது.
28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்ததோடு புள்ளிப்படியலில் சீனா, ஜப்பான், தென்கொரியாவுக்கு அடுத்த 4வது இடத்துடன் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்தது இந்தியா.
குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம் உட்பட மொத்தம் 22 பதக்கங்களும், தடகளப் போட்டிகளில் 6 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 29 பத்தகங்களும் வென்றது. ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற இந்தியா மகளிர், ஆண்கள் என இரு பிரிவிலும் தங்கம் வென்றது.
ஆசிய போட்டியின் இந்த மாபெரும் சாதனையின் மூலம் ஆடவர் ஹாக்கி அணி உட்பட நிகத் ஜரீன், ப்ரீத்தி பவார், பர்வீன் ஹூடா மற்றும் லவ்லினா போர்கோஹைன் போன்ற விளையாட்டு வீரர்கள் பாரிஸில் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய வீரர்கள் புதிய சாதனைகளை படைத்து அதிக பதக்கங்களை அறுவடை செய்ய காத்திருக்கிறார்கள்.