தமிழ் சினிமாவின் கேமரா கவிஞன் என்று அழைக்கப்படும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திரா அவர்களின் பிறந்தநாள் இன்று. கலைத்துறைக்காக இவர் ஆற்றிய பணிகள் சினிமா ரசிகர்களை காலங்களை கடந்து பாலு மகேந்திராவை போற்ற வைத்துள்ளது.
1939ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர் சினிமா கலையை பயில்வதற்காக 1966ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த கோகிலா எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார்.
தனது திரையுலக வாழ்வின் 36 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் இவர். தமிழ் சினிமாவை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார்.
1979 ஆம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் திரைப்படம் தான் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம். 1982 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை வைத்து இவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி, என் இனிய பொன்நிலாவே போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதளவில் ரசிக்கப்படுகிறது.
ஒரு கலைஞன் தனது கலையை எந்த அளவில் ரசிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாலு மகேந்திராவின் படங்கள். பாலு மகேந்திரா தனது திரைப்பயணத்தில் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார், அதில் இரண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ராம், பாலா, அமீர் , வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்ற இயக்குனர்கள் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர்களே. அதுமட்டுமின்றி சமீபத்தில் மறைந்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பாலுமகேந்திராவின் உதவி ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான நடராஜ் சுப்ரமணியன் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோரும் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களே.
பாலுமகேந்திரா இவ்வுலகை விட்டு சென்றாலும் கலைத் துறைக்கு அவர் ஆற்றிய பணியும் தியாகமும் என்றும் மக்கள் மனதில் மறவாத ஒன்றாய் நிலைத்து நிற்கும். இயக்குனர் பாலுமகேந்திராவின் 82வது பிறந்த நாளில் அவரை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.