2019 ம் ஆண்டு வெளிவந்த படங்களில் தங்களது வில்லத்தனம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்கள் பற்றிய தொகுப்பு
நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் ஹீரோக்களை கண்டு ரசித்த மக்கள், வில்லன்களாக நடித்த நடிகர்களை வெறுத்தும் திட்டியும் உள்ளனர். M.N நம்பியார், அசோகன், P.S வீரப்பா, ஆனந்த் ராஜ், ரகுவரன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ் என ஒவ்வொரு கால கட்டத்தையும் பல வில்லன்கள் ஆக்ரமித்து உள்ளனர்.
சமீப காலமாக ஹீரோக்களே வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிப்பது ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், இந்த 2019 ம் ஆண்டு வெளிவந்த படங்களில் சிறந்த வில்லதனத்தை வெளிப்படுத்தி மக்கள் மனதிலும், தமிழ் திரை உலகத்திலும் தனக்கான இடத்தை பிடித்த சிறந்த 10 வில்லன்களின் லிஸ்ட் இதோ :
அன்புவாக அர்ஜுன் தாஸ் – கைதி
இந்த வருடத்தின் மிரட்டலான இளம் வில்லன் என்ற அடையாளத்துடன் தனது திரை பயணத்தை தொடங்கி உள்ளார் அர்ஜுன் தாஸ். போதை கும்பல் தலைவனின் சகோதரனாக கதாபாத்திரம் ஏற்று தன்னுடைய அசாதாரணமான நடிப்பாலும், குரலாலும் கைதி படம் மூலம் ரசிகர்களை மிரள வைத்தார் அர்ஜுன் தாஸ்.
J.K ஷர்மாவாக ஜாக்கி ஷெராப் – பிகில்
பாலிவுட்டில் தனக்கென்ன தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் ஜாக்கி ஷெராப். தீபாவளிக்கு வெளியான தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று ஸ்டைலாக மிரட்டி இருந்தார். அமைதி மற்றும் சாந்தமான வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இந்த வருடத்தின் சிறந்த வில்லன்களில் ஒருவராக உள்ளார்.
சிங்காரமாக நவாஸுதீன் சித்திக் : பேட்ட
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராக, பழி வாங்கும் வில்லனாக தனது கதாபாத்திரத்தை கனகச்சிதமாய் செய்திருந்தார் நவாஸுதீன் சித்திக். “அடிச்சது யாரு” என்று சூப்பர் ஸ்டார் சொன்ன வசனத்தை தனக்கே உரித்தான ஸ்டைலில் ரிப்பீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கவுதம் வீர்ராக ஜெகபதி பாபு – விஸ்வாசம்
தென்னிந்திய திரைப்படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் பல ரசிகர்களை பெற்றவர் ஜெகபதி பாபு. தனது மகளின் நிலைமைக்கு பழிவாங்க ஹை-கிளாஸ் வில்லனாக ஸ்டைலாக மிரட்டி படத்தின் வெற்றிக்கு மிக பெரிய பங்கு சேர்த்தார்.
பெர்லினாக பகவதி பெருமாள் – சூப்பர் டீலக்ஸ்
எந்த நிகழ்விலும் தனக்கு ஒரு சாதகத்தையும் பலனையும் தேடும் ஒரு காவல் துறை அதிகாரி வேடத்தை மிக சரியாக செய்து இருந்தார் பகவதி பெருமாள். குணச்சித்திர நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தன்னால் வில்லனாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். இந்த வருடத்தின் சிறந்த வில்லன்களில் ஒருவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டுள்ளார் .
MLA தன்ராஜாக கே. எஸ். ரவிக்குமார் – கோமாளி
ஏரியாவில் இருக்கும் தாதாவை கொல்வதும், பின்பு பெரிய தாதாவாக வருவதும், இறுதியில் மனம் திருந்துவதுமாக நடிப்பை தாறுமாறாக வெளிப்படுத்தி இருந்தார் கே.எஸ். ரவிக்குமார். கதைக்கும் கதையின் நாயகனுக்கும் எதிராக செயல்பட்டு 2019ன் சிறந்த வில்லன்களில் ஒருவராகவும் திரை உலகத்தில் தன் முத்திரையை பதித்தார் கே.எஸ். ரவிக்குமார்.
வடக்கூரான் நரசிம்மனாக ஆடுகளம் நரேன் – அசுரன்
சாதிவெறி கொண்டு பழி தீர்ப்பவராக தனது நடிப்பை மண் மணத்துடன் வெளிப்படுத்தி இருந்தார் ஆடுகளம் நரேன். எதார்த்தமான வில்லத்தனத்தில் தனக்கு நிகர் தானே என்று நிரூபித்த படம் அசுரன்.
மகா தேவாக அபேய் தியோல் – ஹீரோ 2019
கல்வியை வைத்தும், கற்றவர்களை வைத்தும் வியாபாரம் செய்யும் ஒரு வில்லன். ஹை கிளாஸ் உடையில் குரூரமான கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் அபேய் தியோல். சத்தமில்லாமல் மிரட்டி தன்னுடைய நடிப்பை ரசிகர்கள் மனதில் பதிய வைத்து ஹீரோ படம் மூலம் இந்த வருடத்தின் சிறந்த வில்லன்களில் ஒருவராக தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.
ஆதி – யாக அர்ஜுன் சிதம்பரம் – நேர் கொண்ட பார்வை
ஹிந்தியில் ஏற்கனவே ஹிட் அடித்த ஒரு படத்திற்கு, ஏற்கனவே ஒருவரால் நடித்து கொடுக்க பட்ட கதாபாத்திரத்திற்கு தன்னுடைய நடிப்பால் புது வண்ணம் சேர்த்தவர் அர்ஜுன் சிதம்பரம். நேர் கொண்ட பார்வையில் பணக்கார பையனாக, தவறு செய்வதற்கு வருந்தாத நடிப்பை வில்லத்தனத்துடன் சேர்த்து சிறப்பாக செய்து அமைதியாக மக்கள் மனதில் இடம் பெற கதாபாத்திரம்.
ECR காளிராஜனாக ரா. பார்த்திபன் – அயோக்கியா
தெலுங்கில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரம். தமிழுக்கு ஏற்ற வண்ணம் தனக்கே உரித்தான ஸ்டைலிலும், வில்லத்தனத்தில் எதார்த்தத்தை கலந்தும் கலக்கி இருப்பார் ரா.பார்த்திபன். தவறு செய்த தம்பிகளை காப்பாற்றுவதிலும், காவல்துறையை தன் கைக்குள் வைத்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் என பார்த்திபனின் நடிப்பு எல்லாராலும் ரசிக்கப்பட்டது.