கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திரையரங்குகளில் வெளியாக வேண்டிய நிறைய படங்கள் OTT தளங்களில் வெளியானது. அப்படி OTT-யில் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த OTT திரைப்படங்களை பற்றிய பதிவுதான் இது.
மாறா
மலையாளத்தில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீமேக் தான் மாறா. இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சார்லி திரைப்படம் எந்த ஒரு புத்துணர்ச்சி உணர்வை மலையாள ரசிகர்களுக்கு கொடுத்ததோ அதையே பாரபட்சமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் திலீப் குமார்.
இப்படம் ஜனவரி 8, 2021 அன்று OTT-யில் வெளியானது. இப்படத்திற்கு ஜிப்ரானின் இசை திரைக்கதைக்கு ஏற்ப பொருந்தி கதைக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் அமைந்த யார் அழைப்பது மற்றும் ஓ அழகே ஆகிய பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரீமேக் படமாக இருந்தாலும் மாறா படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிக அளவில் ரசிக்க வைத்தது.
லிஃப்ட்
வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அமிர்தா ஐயர் நடித்து OTT-யில் வெளிவந்த திரைப்படம் Lift. திகிலான கதை அம்சத்தை கொண்ட இப்படம் இந்த வருடம் வெளியான திகில் படங்களில் ஒரு சிறந்த படமாக மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தது. இப்படத்தில் கவின், அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி. பாலாஜி வேணுகோபால் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அமைந்த இன்னா மயிலு எனும் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம்
பொதுவாக சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு தேவையான கருத்தை ஆழமாக கூறிய திரைப்படமாக இந்த ஆண்டு ஜெய்பீம் அமைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சமூகத்தின் சம நீதியை நிலைநாட்டும் படமாக அமைந்தது.
இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ்-ன் நடிப்பு சினிமா ரசிகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டது.
மண்டேலா
ஒரு ஓட்டு சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கும் வல்லமை உடையது என்பதை பற்றியும், ஓட்டுரிமையை பற்றியும் எளிதான கதையம்சம் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படமே மண்டேலா. உலகத்தரம் வாய்ந்த திரைக்கதை அம்சத்தை அமைத்ததற்காக இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் அவர்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
யோகி பாபுவை கதாநாயகனாக கொண்டு வெளிவந்த இப்படம் 94வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 14 இந்திய படங்களில் ஒரு படமாக அமைந்தது.
சார்பட்டா பரம்பரை
ஒரு வழக்கமான குத்துச்சண்டை படமாக இல்லாமல் 1970களில் மெட்ராஸில் நடத்தப்பட்டு வந்த ரோசமான ஆங்கில குத்து சண்டையை பிரத்தியேகமாக நமது கண்முன் நிறுத்தியிருக்கிறது சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித்தின் அட்டகாசமான இயக்கமும், விறுவிறுப்பான திரைக்கதை அம்சமும் இப்படத்தை உலக அளவில் பிரபலம் ஆக்கியது.
இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கைன், தங்கதுரை, காளி வெங்கட் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது. ஒரு முறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் சாராம்சங்களை கொண்ட இப்படம் இந்த ஆண்டின் ஒரு சிறந்த OTT ரிலீஸ்.
நெற்றிக்கண்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து வருகிறார். அந்த வகையில் பார்வை இல்லாத ஒரு பெண்ணாக நெற்றிக்கண் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படம் கொரிய மொழியில் வெளிவந்த Blind திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
மிலிண்ட் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து அஜ்மல் அமீர், மணிகண்டன், சரன் சக்தி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. இப்படத்தில் அமைந்த “இதுவும் கடந்து போகும்” பாடல் தமிழ் இசை ரசிகர்களின் ரிங்டோன் ஆகவும் காலர் டியூன் ஆகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் OTT-யில் வெளிவந்த ஒரு சிறந்த க்ரைம் த்ரில்லராக நெற்றிக்கண் திகழ்கிறது.