இந்தியாவின் நிலவு மனிதன் என்று அழைக்கப்படும் மயில்சாமி அண்ணாதுரை தனது 62-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரை பற்றிய சிறு குறிப்பை இப்பதிவில் காணலாம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கோதவாடி எனும் கிராமத்தில் பிறந்த இவர் தன் பள்ளிப்படிப்பை தன் சொந்த கிராமத்திலேயே படித்தார். 1980-ஆம் ஆண்டு கோவையில் உள்ள அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார் அண்ணாதுரை. அதன் பின் 1982-ல் முதுகலை பட்டம் பெற்ற இவர் அதே ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது கடின உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் பலனாக இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் INSAT மிஷனில் இயக்குனராக பதவியேற்றார்.
மயில்சாமி அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு பயணம் செய்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அறிவியலைப் படிக்க ஊக்கமளிக்கும் உரையாடல்களை மேற்கொள்வது வழக்கம். இந்த ஒரு குணம் இவருக்கு இருப்பதால் இவரை இளைய கலாம் என்று மாணவர்கள் அன்புடன் அழைப்பர்.
மயில்சாமி அண்ணாதுரை இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும் வகையில் “கையருகே நிலா” எனும் தலைப்பில் இவர் ஆற்றிய சந்திராயன் பணிகளை உள்ளடக்கி ஒரு நூலை எழுதியுள்ளார்.
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை யைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு இடம்பெற்றுள்ளது தனிச்சிறப்பு.
மயில்சாமி அண்ணாதுரை கர்ம வீரர் காமராசர் நினைவு விருது, ஐந்து முனைவர் பட்டங்கள், சந்திராயன் 1 திட்டத்திற்கான 3 சர்வதேச விருதுகள், தேசிய ஏரோநாட்டிக்கல் அறிவியல் தொழில்நுட்ப விருது, சி.பா ஆதித்தனார் இலக்கியப் பரிசு எனப் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
அண்ணாதுரை அவர்கள் இந்திய செயற்கைக்கோள்களின் செயல் திட்ட இயக்குனராக 8 திட்டங்களில் சிறப்பு பணியாற்றியுள்ளார். இந்தியாவின் முதல் நுண்நிலை தொலையுணர்வு செயற்கைக்கோள் மற்றும் அனைத்து தொலையுணர்வு செயற்கைக்கோள்களின் குடும்பங்களுக்கு தலைமை திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது மயில்சாமி அண்ணாதுரை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உப தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கும் தமிழனுக்கும் உலக அளவில் பெருமை தேடித்தந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.