Cinema News Stories

தோல்வியில் இருந்து தொடங்கிய பகத் பாசில்

Fahadh-Faasil

மொழிகளுக்குள்ளும் மாநிலங்களுக்குள்ளும் ஓர் எல்லைகளை வகுத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த இந்திய சினிமாக்கள், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மொழிகளை கடந்து இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநில படங்களும் வெவ்வேறு இடங்களில் வெளியிடப்பட்டு அதனுடைய எல்லைகள் பறந்து விரிந்து பெரிதாக காட்சியளிக்கிறது.

இதன் மூலம் பல இயக்குனர்களும் நடிகர்களும் நடிகைகளும் தங்கள் மாநிலங்களில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க பல்வேறு மொழி படங்களில் தோன்றுகின்ற வாய்ப்பை பெறுகின்றார்கள். குறிப்பாக இளம் திரை நட்சத்திரங்கள் இன்று பல மொழிகளிலும் நடிக்கிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் இருந்து இந்திய அளவில் தன் பெயரையும் தன்னுடைய நடிப்பையும் மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கின்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் “அப்துல் ஹமீத் முகமத் பகத் பாசில்” என்கின்ற “பகத் பாசில்”.

இவருடைய அப்பா மலையாளத் திரை உலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகுக்கும் நன்கு அறிமுகமான இயக்குனர் ” பாசில்”. அவருடைய இயக்கத்தில் தான் முதன் முதலாக பகத் பாஸில் சினிமாவில் தோன்றினார். 2001 ஆம் ஆண்டு “கையொத்தும் தூரத்து” என்ற படத்தில் அறிமுகமான பகத் பாஸில் படித்தது ஊட்டியில் உள்ள “லாரன்ஸ் பள்ளியில்”. பிறகு கல்லூரியை ஆலப்புழாவில் முடித்தார்.

அந்த சமயத்தில் தான் தந்தையின் இயக்கத்தில் கையெத்தும் தூரத்து என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா சென்று தன்னுடைய மேற்படிப்பை முடித்துவிட்டு மீண்டும் கேரளா வந்த பகத் பாஸில் 8 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு “கேரளா காஃபே” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படமாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த படமாக “காக்டெயில்” என்ற படத்திலும் “டோரண்ட்மெண்ட்” என்ற படத்திலும் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். இந்த சமயத்தில் தான் 2014 ஆம் ஆண்டு “பெங்களூரு நாட்கள்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் தனது ஜோடியாக நடித்த “நஸ்ரியாவையே” பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய அபாரமான நடிப்புத் திறமை காரணமாக தமிழ் ரசிகர்களும் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டத் தொடங்கினார்கள். அதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு “சிவகார்த்திகேயன்” கதாநாயகனாக நடித்த “வேலைக்காரன்” படத்தில் வில்லனாக தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் தோன்றிய பகத் பாசில், 2022 ஆம் ஆண்டு “கமல்ஹாசன்” உடன் இணைந்து “விக்ரம்” படத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

அதே சமயத்தில் தெலுங்கு படமான “புஷ்பா” படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அதிலிருந்து பல வில்லன் நடிகர்களின் மத்தியில் இவர் முதன்மையாக திகழ்ந்தார். 2023 ஆம் ஆண்டு ‘ரத்தினவேலு’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் “மாமன்னன்” படத்தில் அரசியல்வாதியாக நடித்து அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த வருடம் வெளிவந்த “ஆவேசம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். இன்று அவருடைய நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. மலையாள சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாக்களில் பெரும்பான்மையான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பகத் பாசில் இன்றைய வளரும் இளம் திரை நட்சத்திரங்களுக்கு ஒரு முன்மாதிரி என்று சொல்ல வேண்டும்.

காரணம் தன்னுடைய முதல் படமான “கையெத்தும் தூரத்து” படம் பெரும் தோல்வி அடைந்தபோதும் மனம் தளராமல் தன்னுடைய நடிப்பையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு மீண்டும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, வெளிப்படுத்தி ஒரு வெற்றிகரமான நடிகராக இன்று மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் திகழ்கிறார் என்றால் அவருடைய தன்னம்பிக்கையும் சினிமா மீது அவர் கொண்டிருந்த அறிவும் அவருடைய பேராற்றலும் தான் காரணம்.

அப்படிப்பட்ட நடிகர் பகத் பாசிலின் பிறந்த தினமான இன்று இன்னும் பல வெற்றிகளையும் உயரங்களையும் தொட வேண்டும் என்று சூரியன் FM தன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகத் பாசிலுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

கே .எஸ். நாதன், சூரியன் FM கோவை.