Cinema News Stories

மக்களின் மார்க் ஆன்டனி – ரகுவரன் !!!

இந்திய சினிமா வரலாற்றில் கதாநாயகர்களுக்கு இணையாக தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் குணச்சித்திர நடிகர்களும், துணை நடிகர்களும் ஏராளம். அந்தப் பட்டியலில் ரகுவரனுக்கு ஒரு முக்கிய இடத்தை நாம் கொடுத்தே ஆகவேண்டும். மறைந்த நடிகர் ரகுவரனின் 62வது பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் முதலே Experimental கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ரகுவரன் ஆர்வம் காட்டி வந்தார். ரகுவரன் மலையாள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் பேசும் தமிழுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

80-களில் கதாநாயகனாக மைக்கேல் ராஜ், மேகம் கருத்திருக்கு, கூட்டுப் புழுக்கள் போன்ற படங்களில் ரகுவரன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரகுவரன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

ரகுவரனை ஹீரோவாக பார்த்து ரசித்ததை விட வில்லனாக ரசித்தவர்கள் தான் அதிகம். திரையுலக வாழ்க்கையில் தன் முதல் படமான “கக்கா” எனும் மலையாளப் படத்தில் வில்லனாக அறிமுகமான ரகுவரன், 1983ஆம் ஆண்டு வெளிவந்த “சில்க் சில்க் சில்க்” என்ற தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

ரகுவரன் என்ற பெயரை சொன்னவுடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது பாட்ஷா திரைப்படம் தான்.இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிராக இவர் ஏற்று நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் திரையில் நம்மை மிரட்டிய வில்லன்கள் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற ஒரு வில்லன் கதாபாத்திரம் மீண்டும் ரகுவரனுக்கு அமையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் 1999ஆம் ஆண்டு முதல்வன் திரைப்படத்தில் அரங்கநாதன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை விட்டு என்றுமே நீங்காத சினிமா வில்லனாய் ரகுவரன் இடம் பிடித்தார்.

முதல்வன் திரைப்படத்திற்காக தமிழக அரசின் 1999-ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருதை ரகுவரன் பெற்றார். 1982 முதல் படங்களில் நடித்து வந்த ரகுவரன் 150க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன், துணை நடிகர் என மாறுபட்ட பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி காலத்தால் அழியாத கலைஞனாக, இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இருந்து வருகிறார், இனியும் இருப்பார்.

ரசிகர்களின் மார்க் ஆன்டனி-யை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுகிறது சூரியன் FM.