Cinema News Stories

இனி தனது கலையால் வாழப்போகும் நடிகர் பாண்டு !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 180-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பாண்டு நடித்துள்ளார்.

இவர் நடித்த பல படங்களில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் சுலபமாக பதிந்த எதார்த்தமான கதாபாத்திரங்களாகவே அமைந்தது. 1970-ஆம் ஆண்டு ஜெய் ஷங்கர் நடித்து வெளிவந்த ‘மாணவன்’ திரைப்படத்தில் ‘டிமிக்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து தன் திரையுலக பயணத்தை பாண்டு தொடங்கினார்.தன் திரையுலக வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளில் 13 படங்களில் மட்டுமே நடித்த பாண்டு, அதன் பின் நிறைய படங்களில் தொடந்து நடித்து அடுத்த 30 ஆண்டுகளில் 150-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தலைமுறைகள் தாண்டி அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் பாண்டு இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக “காதல் கோட்டை” திரைப்படத்தில் தல அஜித்துடன் பாண்டு இணைந்து நடித்த “ராமசாமி” கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல குணச்சித்திர நடிகர் என்ற பெயரை வாங்கி கொடுத்தது.

நடிப்பது மட்டுமின்றி ஓவியங்கள் வரைவதிலும் பாண்டுவுக்கு ஆர்வம் அதிகம். தென் இந்தியாவிலேயே ஓவியக்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஒரே ஓவியர் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டு வரைந்த ஓவியங்கள் அமெரிக்கா, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற பல்வேறு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. ஓவியக்கலை மேல் அவருக்கு இருந்த ஆர்வம் அவரை ஒரு சிறந்த “lOGO” வடிவமைப்பாளராகவும் வலம் வர வைத்தது.நமக்கு தெரிந்த பல பிரபலமான “lOGO”-க்களை பாண்டு உருவாக்கியுள்ளார். LOGO-க்கள் வடிவமைப்பதிலும் பாண்டு சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரோனாவால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் பாண்டுவின் மறைவு திரையுலகினரும் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது. பாண்டு அவர்களின் மனைவி குமுதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சூரியன் fm சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். உடலால் இம்மண்ணை விட்டு சென்றாலும், தன் கலையால் என்றும் மக்கள் மனதில் என்றும் பாண்டு வாழ்வார்.

Tags