Specials Stories

தேனிசையின் பிறந்தநாள் !!!

தேனிசைத் தென்றல் தேவா தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல வெற்றிப்படங்களுக்கு எண்ணற்ற சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களால் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தேவா இருந்து வருகிறார்.

1989-ஆம் ஆண்டிலிருந்து தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய தேவா மெலடி, குத்து பாடல்கள், கானா பாடல்கள் என பல விதமான பாடல்களை இசையமைத்து தன் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். குறிப்பாக இவரது கானா பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னனி கதாநாயகர்களின் படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

2000-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து வெளிவந்த குஷி திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக தேவாவிற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தேவா இசையமைத்த பாட்ஷா திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத மெகா ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.

“சூப்பர்ஸ்டார் ரஜினி” என்று திரையில் வரும் டைட்டில் Card-ன் பிரத்யேக Bgm-ஐ இசைஅமைத்ததும் தேனிசைத் தென்றல் தான். வாலி, அவ்வை ஷண்முகி, அண்ணாமலை, சிட்டிசன் என இவரது வெற்றிப்படைப்புகளை கணக்கிட ஒரு கட்டுரை போதாது. இவரது இசையும், குரலும் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து மறவாமல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு என 4 மொழிகளில் தேவா பாடல்களை இசையமைத்துள்ளார். 90-களில் இருந்து 2020 வரை ரசிகர்களின் மனதிலும், Playlist-லும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

About the author

alex lew