தேவயானி – 90 களில் தமிழ் சினிமாக்குள்ள தேவயானி கால் பதித்தப்போ நிறைய முன்னணி நடிகைகள் ஏற்கனவே தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் வச்சுருந்தாங்க, அப்படி இருந்தப்போ புதுசா வந்த தேவயானிக்கு அவங்கள தனித்து அடையாளப்படுத்துறது ஒரு பெரிய சவாலான விஷயமா தான் இருந்தது.
தமிழ்-ல முதல் படமான “தொட்டாச்சிணுங்கி”ல இவங்க இரண்டாம் கதாநாயகியா இருந்தாலும் , மூன்றாவது படமான காதல் கோட்டை-ல முழு கதாநாயகியாக படம் முழுவதும் கலக்கலா நடிச்சுருப்பாங்க.
சொல்லப்போனா டைரக்டர் அகத்தியன் கட்டிய காதல் கோட்டையில் இவுங்க தான் காதல் ராணியாக இருந்தாங்க அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அன்றைய காலத்து இளைஞர்களின் கனவு ராணியாக மாறுனாங்க.
கமலி கதாபாத்திரம் உச்சத்துல இருந்த நேரத்துல அவங்கள மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது தான் ‘சூரியவம்சம்’ நந்தினி கதாபாத்திரம், இன்றைக்கும் சூரியவம்சம் படம் TV-ல போட்டா எல்லா வேலையும் மறந்துட்டு அந்த படத்தை அவ்ளோ ரசிச்சு பாக்குற குடும்பங்கள் நிறைய உண்டு. குறிப்பா நந்தினி மாதிரி ஒரு பொண்ணு நம்ம வாழ்க்கைல வர மாட்டாங்களானு எதிர்பாக்குற நிறைய சின்ராசு நம்ம ஊர்ல இருக்காங்க .
அதுமட்டுமில்லாம பாரதி கண்ட புதுமைப்பெண்கள் இந்த சமூகத்தில் நிறைய பேரு இருந்தாலும் பாரதி யின் பெண்ணாக (மனைவி ) இவர் நடித்த செல்லம்மா கதாபாத்திரம் இவங்களோட நடிப்பு பயணத்தில் இன்னொரு மைல் கல். ஒரு வெள்ளந்தியான கலகலப்பான கிராமத்து பொண்ணா ‘நினைத்தேன் வந்தாய்’ படத்துல இவங்க நடிச்சது சத்தமே இல்லாம தன்னடக்கமா நடிச்சுட்டு இருந்த நம்ம தேவயானியா இது-னு எல்லா ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
‘நீ வருவாய் என’ , ‘மறுமலர்ச்சி’ , ‘தெனாலி’ , ‘Friends’, ‘ஆனந்தம்’ , ‘அழகி’ இப்படி இவங்களோட வெற்றி படங்கள வரிசையா சொல்லிக்கிட்டே போகலாம். பஞ்சதந்திரம் படத்துல கமல் பல தந்திரம் பண்ணாலும் தேவயானி பண்ண தந்திரம் தான் படத்துல செம ஹிட். சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை-னு ஒரு பாட்டு இருக்கும், அதே மாதிரி எல்லா படங்களிலும் தேவயானிக்கு வேற ஒருத்தவங்க டப்பிங் கொடுத்திருப்பாங்க, ஆனா விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்துல அவுங்க சொந்த குரலில் பேசிருப்பாங்க.
வெள்ளித்திரை-ல சாதிச்ச கதாநாயகிகள் சின்னத்திரைல கால் பதித்த நேரத்துல தேவயானியும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆனாங்க. வெள்ளித்திரை-ல வெற்றிப்படி ஏறிய தேவயானி அவர்களுக்கு சின்னத்திரை சின்ன விஷயம் தான் . 90-களில் வெள்ளித்திரை மூலமா இளைஞர்களின் கனவு பெண்ணாக இருந்த தேவயாணி 2000 காலத்தில் சின்னத்திரை மூலமா தமிழ் மக்களின் குடும்ப பெண்ணாக மாறிட்டாங்க .
அதுக்கு முக்கிய காரணம் இவங்க நடிச்ச “கோலங்கள்” மெகாத்தொடர் தான் . இவங்க போட்ட கோலங்கள் இன்னும் அழியல. இவங்க புகழும் இன்னும் குறையல . கலைத்துறையில் இவ்வளோ சாதனை படைத்த இவங்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
தேவயானி நடித்த வல்லரசு படத்துல ஒரு பாட்டுல ஒரு வரி வரும் , தித்திக்கும் தேவயானி தினம்தோறும் தேவைதான் நீ-னு. அதை இப்படி மாத்தலாம், தித்திக்கும் தேவயானி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தேவைதான் நீ !
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தேவையாக மாறிய தேவயானி அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article By, Hari Mari Muthu. B