தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது மட்டுமின்றி, தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் திகழும் தனுஷ் அவர்கள் திரையுலகில் தடம் பதித்து இன்றுடன் 19 வருடங்கள் நிறைவடைகிறது. தனுஷின் ரசிகர்கள் இந்நிகழ்வை #19YearsOfDhanushism என்ற Tag-ஐ ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் அவர்கள் நடித்த முதல் படமான “துள்ளுவதோ இளமை” திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் ஆகிறது. “துள்ளுவதோ இளமை” முதல் “கர்ணன்” வரை தன்னை தனுஷ் எப்படியெல்லாம் மெருகேற்றியுள்ளார் என்பதற்கு அவரது அசுர வளர்ச்சியே எடுத்துக்காட்டு. எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு, கதையை உள்வாங்கி, அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருப்பார்.
நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர் என திரைத்துறையில் பல்வேறு பரிமாணங்களை தனுஷ் கையாண்டுள்ளார். அவரது அயராத உழைப்பும், கலை மீது உள்ள ஆர்வமும் அவரை கோலிவுட்டிலேயே தங்க வைக்காமல் ஹாலிவுட் வரை கூட்டிச் சென்றுள்ளது. தனுஷை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அவருக்கு இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், இரண்டு முறை சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கி கௌரவித்தது.\
சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளிவந்த “கர்ணன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. வழக்கம் போல் இப்படத்திலும் தனுஷின் நடிப்பு பார்ப்போர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. மேலும் பல வெற்றிப்படங்களில் தனுஷ் நடித்து, தகர்க்க முடியாத தடைகளையும் தாண்டி அவரின் வெற்றிக் கொடியை ஊன்ற வேண்டும் என்பதே தனுஷ் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
19 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்தமைக்கு நடிகர் தனுஷுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.