சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கஞ்சா கருப்பு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பர். எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது. வாழ்வில் பல துன்பங்களால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் தர்மதுரை எனும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் எப்படி மறுவாழ்வு பெறுகிறது என்பதே இத்திரைப்படத்தின் கதை சுருக்கம்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. இப்படத்தில் அமைந்த மக்க கலங்குதப்பா பாடல் படம் பார்க்கும் அனைவரையும் துள்ளாட்டம் போட வைத்த பாடலாக அமைந்தது. இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து நான்கு பாடல்களை எழுதியுள்ளார்.
வைரமுத்து அவர்கள் எழுதிய எந்தப் பக்கம் பாடல் அவருக்கு 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே 2016 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.
இப்படம் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது குறிப்பிடத்தக்கது. இப்படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தற்போது இணையத்தில் ரசிகர்கள் #4YrsOfBBDharmadurai எனும் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.