தமிழக மாணவர்களின் ஓவியத் திறமையை ஊக்குவிக்கும் விதமாக வருடம் ஒருமுறை சூரியன் FM நடத்தும் ‘டிஜிட்டல் வர்ணஜாலம்’ சீசன்-3 பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் பங்களிப்புடன் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 3000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற இந்த பிரம்மாண்ட ஓவிய போட்டிக்கு இது வரை இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளனர்.
வகுப்பு வாரியாக பிரிவுகள் கொண்டு நடத்தப்படும் இந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் திறமைசாலிகளுக்கு ஒவ்வொரு வருடமும் கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும். அதே வழிமுறையில் இந்த வருடமும் வர்ணஜாலம் நடந்து முடிந்துள்ளது. பரிசுகள் விரைவில் மாணவர்களை வந்தடையும்.
மாணவர்கள் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஓவியங்களை அனுப்பியிருந்தனர்.
Category 1 | 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை “My Happy Home”
Category 2 | 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை “My Favourite Sport”
Category 3 | 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை “Tamilnadu in 2030”
பல்வேறு மாணவர்கள் சிறப்பாக ஓவியங்கள் வரைந்து அசத்தியிருந்தனர். முதல் பிரிவுக்கு ஓவியர் பிரேம் டாவின்ஸி நடுவராக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார். 2வது பிரிவுக்கு Art Director கிரண் நடுவராக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார். 3வது பிரிவுக்கு ஓவியர் ட்ராட்ஸ்கி மருது நடுவராக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
வழக்கமான மாணவர்களின் பங்கேற்பை தாண்டி, புதிதாக நிறைய மாணவர்கள் இந்த முறை வர்ணஜாலம் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஓவியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளை போட்டியில் கலந்து கொள்ள வைத்து ஊக்குவித்துள்ளனர். அனைத்து குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல அற்புதமான ஓவியங்கள் எங்களை வந்து சேர்ந்தது.
நடுவர்கள் உன்னிப்புடன் நீண்ட நேரம் கவனித்து சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து கொடுத்தனர். கடந்த 2 வருடங்கள் போலவே டிஜிட்டல் உலகில் தமிழக மாணவர்களுக்கான பிரம்மாண்டமான ஓவிய போட்டியாக இந்த வருடம் நடைபெற்ற டிஜிட்டல் வர்ணஜாலம் சீசன் 3-ம் இருந்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்கள் சோர்ந்து விடாமல் அடுத்த வருடம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும். போட்டியில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைவருக்கும் சூரியன் FM-ன் நன்றியும், வாழ்த்துகளும்.