Specials Stories Trending

இயக்கத்தின் முதல்வன் – ஷங்கர் !!!

சாமானிய மக்களின் அடிமனது இச்சைகளையும் உருவகப்படுத்தி “இயக்குனர்களின் ரஜினிகாந்தாய்” மனதில் நிற்கும் ஷங்கர்

                       தன்னை சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்த மிமிக்ரி ,பாடல் , கலாய் என ஜாலியாய் இருந்த இளைஞனின் வாழ்வில் “திருப்புமுனை” ஏற்படுத்தியது ஓர் நாடகம். தான் கண்ட நாடகத்தில் ஓர் கதாபாத்திரத்திரத்திற்கு கிடைத்த கைதட்டல் இந்த இளைஞனுள் நடிக்க வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியது.

சின்ன சின்ன நாடகங்களில் நடித்த இவருக்கு எப்படியாவது படங்களில் நடிக்க வேண்டும்.,ஓர் படமாவது இயக்கினால் போதும் என்ற எண்ணம். அதன் உந்துதலில் துணை இயக்குனராய் சேர்ந்த இந்த ஜென்டில்மேன்னை தன் காதலனாய் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது சிறப்பு. சின்ன சின்ன விஷயங்களிலும் தன் முத்திரையை பதிக்க இந்த இளைஞன் செய்த முயற்சி இவரை பிரமாண்டத்தின் உச்சாணியில் சென்று அமர்த்தியது.

தன்னுடைய திரைப்படங்களின் வாயிலாக சமூக அவலங்களுக்கான காரணங்களை சாமானியருக்கும் புரியும்படி விளக்கிய இவரின் ஒன்-லைனர்களுக்கு கூர்மை அதிகம் . ” 5 பைசா திருடினா தப்பா., 5 கோடி பேர்ட்ட 5 பைசா திருடினா தப்பா., 5 கோடி பேர்ட்ட 5 தடவை 5பைசா திருடினா தப்பா”ங்கற மூணு வரில எளிமையா ஊழல புரிய வைச்சாரு. 

” விஷ்வநாதன் – ராமமூர்த்தி, மாயக்கிருஷ்ணன் , மங்களம் , வசீகரன் , பஞ்சவன் பாரிவேந்தன்னு” கதாபாத்திரங்களையும் தாண்டி கதாபாத்திரங்களின் பெயர்கள் மூலமும் தன் முத்திரையை முழுசா பதிச்சார் அந்த இளைஞர் .ஓர் பிரமாண்ட கலைக்காதலனாய் பல கோடி இந்தியர்களின் மனதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வனாய் இருக்கும் இவரது பணி அளப்பரியது.

ஆம் அவர் தான் நம் மனம் கவர்ந்த இயக்குனர் ஷங்கர். தன் கலை கலீடியோஸ்கோப் கொண்டு சமூகத்தின் பல முகங்களை காட்டும் இவரது யுடோப்பிய கனவு மெய்ப்பட வாழ்த்துகிறோம்.

இயக்குனர் ஷங்கர் தனது 57வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்திய சினிமாவை உலக அரங்கில் ஒரு முதன்மையான இடத்தில் வைத்த பெருமை மிக்க இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர்.

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை இணையத்தில் ஆரவாரத்துடன் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி #HappyBirthdayShankar என்ற டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியன், சிவாஜி, எந்திரன் என பல வியப்பூட்டும் படைப்புகளை ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்துள்ளார். இவரது பிரம்மாண்டமான திரைக்கதைக்கெனவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

படங்களை இயக்குவது மட்டுமின்றி பல்வேறு நல்ல படைப்புகளை ஷங்கர் தயாரிக்கவும் செய்துள்ளார். காதல், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, கல்லூரி, ஈரம் போன்ற வெற்றிப்படங்களை ஷங்கர் தயாரித்துள்ளார்.

வெயில் திரைப்படத்தை தயாரித்தற்காக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ஷங்கருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜென்டில்மேன் மற்றும் அந்நியன் திரைப்படங்களை இயக்கியதற்காக தமிழக மாநில அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது ஷங்கருக்கு வழங்கப்பட்டது. இவர் இயக்கிய இந்தியன், அந்நியன் மற்றும் சிவாஜி திரைப்படங்கள் தமிழக மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வாங்கியது.

இயக்குனர் ஷங்கர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல உன்னதமான பிரம்மாண்டமான படைப்புகளை ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு சூரியன் FM  சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew