கடந்த மார்ச் மாதமே வெளியாக வேண்டிய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கொரோனா இரண்டாம் அலையால் தாமதமாக வெளிவரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படக்குழுவினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இப்படத்தின் படக்குழுவினரிடம் தினமும் ரசிகர்கள் படத்தை குறித்த அப்டேட்டை சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இது குறித்து டாக்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இன்று வெளியிட்ட பதிவில், ” இது போன்ற நோய் பரவும் காலக்கட்டத்தில் ஒரு தயாரிப்பாளராக முழு படத்தை உருவாக்கி கையில் வைத்திருப்பது ஒரு கடினமான விஷயமே. அது மட்டுமின்றி நம்மை சுற்றியிருக்கும் நபர்களையும் நமக்கு நெருக்கமான நபர்களையும் இழந்து வரும் இந்த காலகட்டத்தில் திரைப்படம் குறித்த விஷயங்களை சற்று தள்ளி வைக்க வேண்டும். அனைவரும் வீட்டில் பத்திரமாகவும், மன வலிமையுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நம் நாடு கொரோனாவில் இருந்து வெளிவந்த பிறகே திரைப்படங்களை கொண்டாடும் மனநிலை எல்லோருக்கும் வரும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் தல அஜித் நடித்து வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டும் இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களை ரசிப்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என்பதை உணர்த்தும் எண்ணத்திலேயே இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை கீழே காணுங்கள்.