மிதக்கும் தோட்டங்கள், மிதக்கும் தீவுகள் மற்றும் மிதக்கும் படகுகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், மிதக்கும் தபால் அலுவலகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதா? காஷ்மீரில் உள்ள அழகிய நகரமான ஸ்ரீநகரில், தால் ஏரியில் ஒரு பெரிய படகில் அழகிய பனி படர்ந்த மலைகளுக்கு இடையே இருக்கிறது உலகின் ஒரே மிதக்கும் தபால் அலுவலகம்.
முதல் பார்வையில், இது ஒரு சாதாரண மிதக்கும் படகு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் உற்று நோக்கினால், இந்திய தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சிவப்பு மற்றும் மஞ்சள் லோகோவை நீங்கள் கவனிப்பீர்கள். மிதக்கும் தபால் அலுவலகம், தால் ஏரி என்று எழுதப்பட்ட பலகை இருக்கும்.
இந்த பழமையான மிதக்கும் தபால் அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது, இன்னும் அது ஏரியில் வசிக்கும் மக்களுக்கு கடிதங்கள் மற்றும் கூரியர்களை விநியோகித்து வருகிறது. இந்த தபால் நிலையம் தற்போது காஷ்மீர் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சல் அட்டையை அனுப்புவதற்காக இந்த தபால் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை நீங்கள் நம்ப மாட்டீர்கள். மேலும் இங்குள்ள தபால் தலைகளில் தால் ஏரியின் உருவமும் இடம்பெற்றுள்ளது, இது இயற்கையின் கலைப் படைப்புக்கு ஒரு வகையான மரியாதை.
சுற்றுலாப் பயணிகள் வரும்போது, பேசக்கூட நேரமிருக்காது. இந்த தபால் நிலையத்தில் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் இங்கிருந்து சிறப்பு அட்டைகள், அஞ்சல் அட்டைகள் மற்றும் முத்திரைகளை வாங்குகிறார்கள். கடிதங்களை அனுப்புவதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
மிதக்கும் தபால் அலுவலகம் 1970 இல் இந்திய மாநில அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 2011 இல் புதுப்பிக்கப்பட்டது. இன்று, 3 முழுநேர ஊழியர்களைக் கொண்ட இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 1,700 நிரந்தர தபால் நிலையங்களில் ஒன்றாகும். இது 2011-க்கு முன் நேரு பார்க் தபால் அலுவலகம் என்று அழைக்கப்பட்டது. ஆனால், 2011-ல், அப்போதைய தலைமை தபால் மாஸ்டர் ஜான் சாமுவேல், அதை மறுபரிசீலனை செய்து, ‘மிதக்கும் தபால் அலுவலகம்’ என பெயர் மாற்றம் செய்ய முயற்சி எடுத்தார்,”
மிதக்கும் தபால் அலுவலகம் 1953 ஆம் ஆண்டு தொடங்கியது, உள்ளூர் அஞ்சல் துறை ஏரிக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மொபைல் டெலிவரி சேவையைத் தொடங்கியது. இணையம் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க்குகளுக்கு முன்பு, மொபைல் தபால் சேவையானது கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளை சேகரிக்கும் ஒரு முக்கியமான உயிர்நாடியாக இருந்தது.
ஆகஸ்ட் 2011 இல், புதுப்பிக்கப்பட்ட மிதக்கும் தபால் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் அப்போதைய முதல்வர் மற்றும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஆகியோரால் முறையாக தொடங்கப்பட்டது. மிதக்கும் தபால் அலுவலகத்தில் இரண்டு சிறிய அறைகள் உள்ளன – ஒன்று அலுவலகமாகவும் மற்றொன்று மாநில அஞ்சல் துறையின் வரலாற்றைக் கண்டறியும் சிறிய அருங்காட்சியகமாகவும் செயல்படுகிறது. இந்த தபால் அலுவலகம் நாட்டில் கிடைக்கும் அனைத்து வழக்கமான அஞ்சல் சேவைகளையும் பெற உங்களை அனுமதிக்கிறது.
இந்த தபால் நிலையத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தபால் நிலையத்தில் உள்ள அருங்காட்சியகம் அதன் வரலாறு மற்றும் பல கவர்ச்சிகரமான தபால்தலைகளை காட்சிப்படுத்துகிறது. இங்கு ஒட்டப்படும் கடிதங்கள் தால் ஏரி மற்றும் ஸ்ரீநகரின் பிற இடங்களின் இயற்கை காட்சிகளின் படங்களுடன் ஒரு சிறப்பு வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் மிக அழகான ஏரிகளில் ஒன்றாக அறியப்படும் தால் ஏரி, பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் மிதக்கும் அழகிய ஷிகாராக்களையும் படகுகளையும் பெற்றுள்ளது. இந்த அழகான மிதக்கும் தபால் அலுவலகம் அதன் அழகை மேலும் கூட்டுகிறது!