சிவபெருமானை மட்டும்தான் ஈஸ்வரன் என்று அழைப்பார்கள். சிவனுக்கு பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே ஈஸ்வரன் பட்டம் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் தர்மத்தை காக்கும் சனீஸ்வரன். மற்றொருவர் முனீஸ்வரன் ஆவர். இந்த முனீஸ்வரன் சிவபெருமானின் காவலர்களில் ஒருவர் ஆவார்.
முனீஸ்வரன் கிராமங்களில் அதிகமாக கோவில் கொண்டிருக்கிறார். அவர் கிராமங்களை இரவு நேரங்களில் காத்து, துஷ்ட சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்டுவார் என நம்பப்படுகிறது. அந்த முனீஸ்வரன் அவதரித்த வரலாற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
கிராமத்தின் எல்லையில் மிரட்டும் தோணியில் கையில் அரிவாளுடன் பெரிதாய் கட்டையில் அமர்ந்திருக்கும் சிலை அவருக்கு முன்னால், இரண்டு கால்களையும் தூக்கியவாறு இருக்கும் குதிரை சிலை என்று கம்பீரமாய் நிற்கும் எல்லை தெய்வம்தான் முனீஸ்வரர். இவர் சிறுதெய்வங்களில் முக்கிய சிறுதெய்வமாக கருதப்படுகிறார். இவர் இரவு நேரங்களில் அந்தந்த கிராமங்களில் வலம் வருவதாகவும் நம்பப்படுகிறது.
இவர் தவறு செய்பவர்களின் தலையில் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. முனீஸ்வரர் ஒரு சைவ சிறுதெய்வமாகவும் பல கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறார். பல கிராம மக்கள் அவருக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தி வழிபட்டு வருகின்றனர். இவர் பலருக்கும் குலதெய்வமாகவும், வீட்டில் எந்த விஷேஷம் நடந்தாலும் இவருக்கே முதல் மரியதை கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்னும் இவரை கிராமங்களில் வீடுகளில் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர். ஆனால் புராணங்களின்படி இவருக்கு இன்னொரு கதையும் உண்டு. முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்னும் அசுரன் ”தேவலோகத்தையே ஆட்சிபுரிய வேண்டும், எனக்கு சிவனாலும் விஷ்ணுவாலும் அழிவு ஏற்படக்கூடாது” என்று பிரம்மனிடம் வேண்டி வரம் பெற்றான்.
பின் தேவர்களையும், மக்களையும் வதைத்து இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும்படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர். பின் பார்வதி அம்மன் காத்தாயி என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி,கும்பமுனி, வால் முனி, சட்டை முனி என்று ஏழு முனிகளை உருவாக்கினார்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தகாசுரனை அடக்கி வதம் செய்தார்கள். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களின் அம்சமாக விளங்குபவரே முனியப்பன் ஆவார்.
என்னதான் இப்படி ஒரு புராணக்கதை இருந்தாலும், இவர் சிறுதெய்வமாகவும், நமது முன்னோர்களில் ஒருவராகவும் மட்டுமே இன்றும் பார்க்கப்பட்டு வருகிறார். இன்றும் இவருக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் கலந்துகொள்ள எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் வெளியூரிலிருந்து கிராமங்களுக்கு படையெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.