நடிகை ஹன்சிகா தனது 29 ஆவது பிறந்த நாளை இன்று (Aug 9, 2020) கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஹன்சிகா படங்கள் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஹன்சிகா தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஹவா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா இந்திய சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து சில இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்து வந்தார். குறிப்பாக கிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த கோயி மில் கயா திரைப்படம் ஹன்சிகாவின் குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது.
2007ஆம் ஆண்டு தெலுங்குவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த தேசமுடுரு திரைப்படம் மூலம் கதாநாயகியாக ஹன்சிகா தடம் பதித்தார். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹன்சிகா கதாநாயகியாக நடித்து வந்தார். 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படம் தான் ஹன்சிகாவிற்கு முதல் தமிழ் படம்.
இப்படத்தில் அவர் ஏற்று நடித்த காயத்ரி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா நடித்தார். இப்படம் மூலம் தனக்கென ஒரு தமிழ் ரசிகர் பட்டாளத்தை இவர் பெற்றார்.
2014 ஆம் ஆண்டு தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஹன்சிகாவுக்கு கிடைத்தது. மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலாயுதம் திரைப்படத்தில் தளபதியுடன் இணைந்து ஹன்சிகா நடித்தார். உதயநிதி ஸ்டாலினின் முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஹன்சிகாவின் மீரா கதாபாத்திரம் இளைஞர்களை கவரும் கதாபாத்திரமாக அமைந்தது.
அதன்பின் பல வெற்றி படங்களில் ஹன்சிகா தொடர்ந்து நடித்தார். அதர்வா நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் தான் ஹன்சிகா நடித்து கடைசியாக வெளிவந்த தமிழ் திரைப்படம். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வரும் ஹன்சிகா மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி, இவர் இணையத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் வைரலாகும்.
ஹன்சிகா மேலும் பல வெற்றி படங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. நடிகை ஹன்சிகா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.