Cinema News Specials Stories

கம்ப்யூட்டர் மூலம் இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பச்சை வண்ண ஆடை போர்த்தி படுத்து கிடக்கும் தேனி மாவட்டத்தின் மையத்தில் குடி கொண்டிருக்கும் பண்ணைபுரத்து கிராமத்தின் வயல்களுக்கு அப்போது தெரிந்திருக்காது இங்குதான் இசை என்னும் ஆலவிருட்சம் முளைக்கப் போகிறது என்று.

நாற்று நடும்பொழுது நாக்கில் ஊறுகின்ற நாட்டுப்புறப் பாடல்களை வயல்களிலும் காற்றிலும் தவழ விட்டுக் கொண்டிருந்த உதடுகளும், கேட்டுக் கொண்டிருந்த செவிகளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை‌… தங்களது பாடல்கள் இன்னும் கால் நூற்றாண்டு காலம் கழித்து, உலகம் முழுக்க உலா வரப்போகிறது என்று.

சாமானியன் தொடங்கி சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற அரசன் வரை இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை அப்படிப்பட்ட அத்தனை பேரையும் தன் இசையோடு சேர்த்து அழைத்துச் சென்ற பெருமை, இசைஞானிக்கு தான் உண்டு. பிறப்பிலும், இறப்பிலும், இன்பத்திலும், துன்பத்திலும், சந்தோஷத்திலும், சோகத்திலும், காதலிலும், ஊடலிலும், கொண்டாட்டத்திலும், தனிமையிலும் என எல்லாப் பொழுதுகளிலும் எல்லா மனிதர்களையும் தன் இசையால் தாலாட்டிய “சங்கீத அன்னை “என்றால் அது இசைஞானி தான்.

ஆரம்பத்தில் தன் சகோதரர்களுடன் இணைந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இளையராஜா என்னும் ராசையா சினிமா ஆசையில் சென்னை வந்து, தன்ராஜ் மாஸ்டர் இடம் மேற்கத்திய இசையையும், கர்நாடக இசையையும் கற்றுக் கொண்டார். வங்காள இசை அமைப்பாளர் “சலீல் சவுத்ரி “தொடங்கி தெலுங்கு இசையமைப்பாளர் “ஜி கே வெங்கடேஸ்வர்” வரை பலரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

அப்போதே அவர்கள் கணித்திருந்தார்கள் பின்னாளில் இளையராஜா இசையில் ஆதிக்கம் செலுத்தப் போகிறார் என்று. 1976 இல் பஞ்சு அருணாச்சலத்தின் மூலம் “அன்னக்கிளி” படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் முதல் பாடலான ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல் வெளிவந்த போது, கேட்ட செவிகளும், உள்வாங்கிய இதயங்களும் இளையராஜாவை தேடத் தொடங்கின.

முதல் பாடலிலேயே சிக்ஸர் அடித்த இளையராஜா அடுத்த 25 ஆண்டுகள் இசை மழையை விடாது பொழிந்தார். ஆயிரம் படங்களில் 7 ஆயிரம் பாடல்கள் 20,000-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகள் என சாதனை சிகரத்தின் உச்சத்தில் இருக்கும் இளையராஜா 1986 ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கணினி மூலம் இசையமைத்தார். இவர்தான் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர்.

ஆர்.கே. செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த செம்பருத்தி படத்திற்கு 5 நிமிடத்தில் ஒரு பாடல் வீதம், 45 நிமிடத்தில் 9 பாடல்களை இளையராஜா இசை அமைத்துக் கொடுத்தார். இப்படி எத்தனையோ புதுமைகளையும் சாதனைகளையும் படைத்திருக்கும் இளையராஜா, “How To Name It?” “Nothing But Wind” போன்ற உலகப் புகழ்பெற்ற இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். பஞ்சமுகி என்ற ராகத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்.

2013ல் CNN, IBN இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய “TWIST OF CINEMA” என்ற கருத்துக்கணிப்பில் உலக அளவில் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்தார் இளையராஜா. இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளரும் இளையராஜா தான்.

5 தேசிய விருதுகள், பத்மபூஷன்; பத்ம விபூஷன் போன்ற நாட்டின் உயரிய விருதுகளோடு, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகளின் விருதுகள், இரண்டு முறை டாக்டர் பட்டம் என இளையராஜாவின் மகுடங்களில் வீற்றிருக்கும் விருதுகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது.

எல்லா தருணங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா மனநிலைகளிலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையோடும் கலந்துவிட்ட இளையராஜா என்னும் இசை பிரம்மா உருவாக்கிய இசையை ஐந்தாவது வேதம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இசைஞானியின் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதில் சூரியன் FM பெரு மகிழ்ச்சி அடைகிறது.

Article By RJ KS Nathan