உலகத்திலே கஷ்டமான விஷயம் மற்றவரை சிரிக்க வைப்பது, அதைவிட கஷ்டம் அவர்களை சிந்திக்க வைப்பது, இது இரண்டையும் மிக சுலபமா செய்து சாதித்தவர் சின்னக்கலைவாணர் விவேக் அவர்கள்.
2K Kids-அ விடுங்க 90s Kids-க்கு கூட கலைவாணர் N.S.கிருஷ்ணன் பற்றி அவ்வளவாக தெரியாது. தமிழகத்தில் நகைச்சுவை மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வந்ததில் இந்த இரு பெரிய ஜாம்பவான்களுக்கு பெரும் பங்குண்டு. கே.பாலச்சந்தர் என்னும் ஆலமரத்தின் விழுதுகளில் முக்கியமானவர் இந்த ஜனங்களின் கலைஞன், நெல்லை சங்கரன்கோவிலில் பிறந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் படித்து, சென்னையில் அரசு வேலை கிடைத்தும் சினிமா மீது கொண்ட தீரா பற்றால் திரைத்துறைக்கு வந்தவர்.
நகைச்சுவை என்ற பெயரில் வெறுமனே அடுத்தவரை உடற்கேலி செய்து நகையுண்டாக்கவில்லை இந்த விவேகானந்தன், யாரை பற்றி குறை சொல்கிறோமோ அவர்களையே வயிறு குலுங்க சிரிக்க வைத்து சிந்திக்க செய்தவர் அவர்.
ஒரு படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரியின் கையை நூதனமாக 8 போட்டு வெட்டியிருப்பார், மற்றொரு படத்தில் காவல் துறை உயரதிகாரிகளை கர்ப்பமான பெண்ணோடு ஒப்பிட்டு பேசியிருப்பார்.
விவேக் தவிர வேறு யாரு அவ்வாறு பேசியிருந்தாலும் முகம் சுளிக்க வைத்திருப்பார்கள். ஆனால் இவர் அனைவரும் ரசிக்கும்படி சிரிப்பலைகளோடு சிந்திக்க செய்திருப்பார். அவரின் இந்த குணம் தான் பல்வேறு ஜாம்பவான்களை அவர் பேட்டி எடுக்கவும் காரணமாக இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி அன்பு அப்துல் கலாம் ஐயா அவர்கள் மதிக்கக்கூடிய கலைஞனாக உருவெடுத்தார் விவேக். அவர் ஆலோசனைப்படி, கிட்டத்தட்ட 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட்டு சென்றிருக்கிறார், நாம் மட்டுமல்ல, நம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அவருக்கு கடமைப்பட்டு இருக்கிறது.
விவேக் அவர்களின் திரைப்படங்களை போன்றே அவருடைய வித்தியாசமான மேடை பேச்சுக்கள் அதிக கவனமீர்க்கும். ஒரு முறை முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரை ஓய்வறியாமால் உழைப்பவர் என்று பாராட்டுவதற்கு அவர் பாணியிலேயே “SUN’க்கு ஏது SUNDAY” என்பார், முத்தமிழ் அறிஞர் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரிப்பார்.
மற்றொரு மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை “இவர் சிவனோட ஒரு Sitting உம் போடுறாரு, எமனோட ஒரு கட்டிங்கும் போடுறாரு” என்பார், ரஜினி உட்பட மொத்த அரங்கிலும் சிரிப்பலை.
வேலையில்லா இளைஞனின் தவிப்பையும், சென்னையின் அறிமுகங்களுக்கு கிடைக்கும் ஆபத்துகளையும், சாதிய மடத்தனங்களையும், ஊடங்களிடையே சிக்கி தமிழ் படும் பாட்டையும், சில அரசியல்வாதிகளின் அரைவேக்காட்டு தனத்தையும், பெண் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தையும் அவ்வளவு நேர்த்தியாக சினிமாவாக காட்சியமைத்து எட்டயபுரத்துக்காரரை போல இந்த சங்கரன்கோவில்காரரும் தன் பங்கிற்கு சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார், ஏறபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்.
நவயுக பாரதியாக திகழ்ந்த இந்த கலைஞன், பாரதியை போலவே பாதியிலே விட்டுசென்றுவிட்டார், சிறிது காலம் நம்மை சிரிக்கவைத்துவிட்டு வாழ்க்கை முழுவதும் சிந்திக்க வைத்த சின்னக்கலைவாணரின் பிறந்த நாளில் ஒன்றை புரிந்து கொள்வோம், “நம் வாழ்வு, எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதிலில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதிலும், எத்தனை பேரை அகமகிழ வாழ வைத்திருக்கிறோம் என்பதிலும் தான் இருக்கிறது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு இன்னலையும் எதிர்கொள்ள விவேக் அவர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்ற பாடம் ரொம்ப சிம்பிள் “ஏலே Don’t Worry Be Happy..!”