அரங்குகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சினிமாவை வயல்வெளிகளிலும், கிராமத்து சாலைகளிலும், யதார்த்த முகங்களிலும் தவழ விட்டு தமிழ் சினிமாவை வேறொரு உச்சத்துக்கு கொண்டு சென்ற முதல் இயக்குனர் என்ற பெருமைக்குரியவர் “இயக்குனர் இமயம் பாரதிராஜா”.
அதுவரை வெளிப்புற படப்பிடிப்பு என்றால் செங்கல்பட்டு கூட தாண்டாமல் இருந்த சினிமா கேமராவை மதுரையின் நிஜ கிராமங்களில் காட்டி இதுதான் கிராமம், இதுதான் அங்கு வாழ்கின்ற மக்களின் நிஜ வாழ்க்கை என்று சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்த பாரதிராஜாவின் முதல் படம் 1976 இல் வெளிவந்த “16 வயதினிலே”. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் இன்றும் பரட்டை, சப்பானி, மயிலு என அந்தப் படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் மக்கள் மனதில் ஆழமாக படிந்து இருக்கிறது.
16 வயதினிலே படத்தில் நடித்தவர்களின் சினிமா வாழ்க்கை உச்சத்துக்கு சென்றது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி என அதில் பங்கேற்ற பலரின் வாழ்க்கையும் சிகரங்களை நோக்கி உயர்ந்தது. இப்படி தனது முதல் படத்திலேயே சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜாவின் அடுத்த படமும் ஒரு கிராமத்து கதை தான்.
“கிழக்கே போகும் ரயில்”… ரயிலை ஓர் அஞ்சல் காரனாக பயன்படுத்தி, காதல் தூதுவனாக மாற்றி புதுமை செய்திருப்பார். வயல்களும் கிராமங்களும் நிறைந்த மருத நிலத்தில் மட்டும் தான் பாரதிராஜா ஜொலிப்பார் என்பதை மாற்றி 1981 இல் நெய்தல் நிலமான கடற்பகுதியில் தனது கேமராவை திறப்பினார். முட்டம் என்ற பகுதியில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட “அலைகள் ஓய்வதில்லை ” படம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்து நகர்ப்புறத்தில் உளவியல் பிரச்சனையை வைத்து பாரதிராஜா எடுத்த “சிகப்பு ரோஜாக்கள்” படமும் பெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சினிமா வாழ்க்கையில் உச்சபட்ச படம் என்றால் அது 1985 இல் வெளிவந்த “முதல் மரியாதை” படம். “நடிகர் திலகம் சிவாஜியை” வைத்து அவரை முற்றிலும் புதிய கோணத்தில் காட்டி, படம் முழுக்க காலில் செருப்பு கூட போட வைக்காமல் ஒரு நடுத்தர வயதுடைய ஆண்மகனின் மனநிலையையும் ஏக்கத்தையும் உள்ளுக்குள் ஏங்கி, தேங்கி கிடக்கும் காதலையும், அதை சொல்ல முடியாத தவிப்பையும் சொல்லி, மக்கள் அனைவரின் கண்களையும், இதயத்தையும் கண்ணீரில் நனைத்த படம் “முதல் மரியாதை”.
அதேபோன்று ஜாதியை மையமாக வைத்து வெளிவந்த “வேதம் புதிது”, பெண் உரிமையை பேசிய “புதுமைப்பெண்”, அரசியல் பேசிய “என் உயிர் தோழன்”, அண்ணன் தங்கை பாசத்தை சொன்ன “கிழக்கு சீமையிலே”, பெண் சிசுக்கொலையை தோல் உரித்து காட்டிய “கருத்தம்மா” என பாரதிராஜாவின் வெற்றிப் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் சில படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. கதை, இசை ,பாடல்கள், நடிப்பு என எல்லாம் இருந்தும் ஏனோ அவரின் “காதல் ஓவியம்” படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதே போன்று அவருடைய மகன் மனோஜை வைத்து Pan India படமாக உருவான “தாஜ்மஹால்” படமும் தோல்வியை தழுவியது. இப்படி சில படங்கள் திருஷ்டி போல வெற்றி பெறாமல் போனாலும் பாரதிராஜாவின் 90% படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.
கமல், ரஜினி, ஜெமினி, விவேக் போன்ற பெரும் நட்சத்திரங்களை உருவாக்கிய “இயக்குனர் பாலச்சந்தர்” நாயகர்களின் இயக்குனர் என்றால், ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சனி, ரஞ்சிதா போன்ற “R”வரிசை நடிகைகளை அறிமுகம் செய்த பாரதிராஜா நாயகிகளின் இயக்குனர் என்று போற்றப்படுகின்றார். நடிகைகள் மட்டுமல்ல, கார்த்திக், நெப்போலியன், நிழல்கள் ரவி, பாண்டியன், ராஜா, கவுண்டமணி, ஜனகராஜ் போன்ற பல நடிகர்களையும், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா என பல இயக்குனர்களையும் உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சாரும்.
6 முறை தேசிய விருதுகள், 4 Filmfare விருதுகள், 6 முறை தமிழக அரசின் கலைமாமணி விருதுகள், ஆந்திரா அரசின் நந்தி விருது, 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது என பல்வேறு விருதுகளையும் புகழையும் பெற்று தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்த தலை மகனாக விளங்குகின்ற பாரதிராஜா என்ற ஒர் ஒப்பற்ற கலைஞனின் பிறந்த தினம் இன்று. அவரை வாழ்த்தி வணங்குவதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.