ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஒரு தந்தை பிறக்கிறார். ஆனால் இவர் பிறக்கும் போது தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடலாசிரியர் பிறந்தார்.
ஆம் பிரசவ வலியால் துடிக்கும் தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்த வைரமுத்து அவர்களுக்கு முதல்முறையாக திரைப்பாடல் எழுத அழைப்பு, இப்பொழுது அதே பிரசவ வலி இவர் மனதில், அருகில் இருந்த உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு படபடவென ஒலிப்பதிவு கூடத்திற்கு செல்கிறார்.
அந்தி மாலை பொழுதில் இரண்டு ஜனனம் நடக்கிறது. மருத்துவமனையில் மதன் கார்க்கி பிறக்கிறார், ஒலிப்பதிவு கூடத்தில் இது ஒரு பொன் மாலை பொழுது என பாடலும் பிறக்கிறது. பிறக்கும் போதே ஒரு கவிப்பேரரசை பிறக்க செய்த மதன் கார்க்கி, பாடலாசிரியர் ஆனதில் ஆச்சரியம் இல்லை.
தமிழ் ஒரு அறவியல் மொழி. அவற்றை முழுமையாகவும் முதன்மையாகவும் பயன்படுத்திவர் வெகு சொற்பம்… எஞ்சி இருக்கும் தமிழைக் காக்க மிஞ்சி இருப்பதில் தமிழ் திரைப்பாடல்களுக்கு பெரும் பங்கு உண்டு. யோசித்துப் பார்த்தால் இப்போது தமிழைக் காக்கவிருக்கும் நிகழ்கால கம்பனும் வள்ளுவரும் அவ்வையும் இத்திரைப்பாடல் எழுதும் கலைஞர்களாகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில் அவர்களால் தான் வெகுஜன மக்களை சென்றடைய முடிகிறது. ஆனால் தற்போது “காலைல எந்திரிச்சேன் காபி குடிச்சேன் பஸ் ஸ்டாப் போனேன் அவள பாத்தேன்னு” பாட்டு எழுதுறாங்க. இதைவிட பேராபத்தான அபத்தங்களும் பாடல்களாகின்றன. இது போன்ற பாடல்களும் தேவைதான் என்றாலும் இதேபோன்று அதிக பாடல்கள் வருவது வருத்தம்.
எனினும் தமிழ் சினிமாவில் நம்பிக்கையூட்டும் நல்ல தமிழ் பாடலாசிரியர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அதிலும் மதன் கார்க்கி போன்றோர் மணி மகுடம். அயல்நாட்டில் படித்து Dr. பட்டம் பெற்ற இவர் நம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றினார். அறிவியலும் தமிழும் கற்ற சான்றோரை எப்போதும் தன் பக்கம் வாரி அணைத்து, தமிழ் தொண்டாற்ற வைப்பாள் தமிழ்த்தாய்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா, மதன் கார்க்கி போன்றோர் தான் அதற்கான சான்று… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் Pre Production Works நடந்த சமயத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைவிற்கு பின் என்ன செய்வதென அறியாது திகைத்தார் இயக்குநர் ஷங்கர். ஏனெனில், Robotics, அறிவியல் தொழில்நுடபம் சார்ந்த படம் என்பதால் “எந்திரன்” என பெயர் வைத்ததிலிருந்து எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு, அந்த படத்திற்கு அளப்பரியது.
எனவே அவரது மறைவு ஷங்கருக்கு பேரிடியானது. அப்போது அவருடன் கை கோர்த்தார் மதன் கார்க்கி. படத்தின் வசனங்கள் மற்றும் இரண்டு பாடல்களையும் எழுதி அசத்தினார். எப்போதும் பாடலாசிரியருக்கு கதைக்களம் ஒரு சவாலை தர வேண்டும் என பலர் கூறுவதுண்டு. அப்படி பார்த்தால் மதன் கார்க்கிக்கு பெரும் சவால், ஒரு இயந்திரத்திற்கு பேரழகி மீது காதல் என்ற பாடல் களம் தான்.
“இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே” இப்படி எழுதியிருப்பார் கார்க்கி, “Memoryil குமரியை தனி சிறை பிடித்தேன், Shutdown-ஏ செய்யாமல் நாளெல்லாம் தவித்தேன்…” சுமார் 3 மணி நேரத்தில் இந்த பாடலை எழுதி முடித்திருக்கிறார் கார்க்கி. ஆனால் இதே எந்திரன் படத்தில் வரும் பூம் பூம் ரோபோ டா பாடலை இயக்குனர் சங்கரிடம் OK வாங்க ஒரு வருடம் ஆகியிருக்கிறது.
அத்தனை மாற்றங்கள் தேவைப்பட்டிருக்கிறது இந்த பாடலுக்கு. ஆனால் பாண்டியநாடு திரைப்படத்தில் வரும் “FY FY FY” பாடலை வெறும் 15 நிமிடத்தில் எழுதி முடித்திருக்கிறார் கார்க்கி. குறிப்பாக இந்த பாடலில் அனைத்து வரிகளும் FY என முடியும் படி அழகாக எழுதியிருப்பார். இதே போன்று “நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் வரும் “என் நெஞ்சில் ஏறினாயே” என்ற பாடலில் அனைத்து வரிகளும் “நாய்” என முடியும் வண்ணம் கவி கோர்த்திருப்பார் கார்க்கி.
ஏதோ ஒரு காதல் பாடல் எழுதினோம் என்றில்லாமல் மதன் எப்பொழுதும் அந்த கதாபாத்திரத்தின் உலகை கொண்டு பாடல் எழுதியிருப்பார், உதாரணமாக “கோ” படத்தில் என்னமோ எதோ பாடலில் “குவியமில்லா காட்சிப்பேழை, அச்சங்கள் அச்சாகும்” என எழுதியிருப்பார் (நாயகன் ஜீவா பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக இருப்பார்). நான் ஈ படத்தில் சமந்தாவை “நுண் சிலை செய்திடும் பெண் சிலையே” என வர்ணித்திருப்பார்.
துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக விஜய் நடித்திருப்பார், “என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்” என எழுதியிருப்பார், நண்பன் படத்தில் அஸ்க் லஸ்கா பாடலில் உலகில் உள்ள பல மொழிகளில் காதல் என பொருள் தரும் வார்த்தை கொண்டு பாடல் இயற்றி இருப்பார். இந்த பாடலில் மருத்துவரான நாயகி “உன் நெஞ்சில் நாடி மணி (Stethoscope) வைக்க அது காதல் என கேட்க” என பாடியிருப்பார் இன்னும் நிறைய…
இவ்வளவு ஏன் உலக வரலாற்றிலேயே பின்பி (Palindrome)- பின்னிருந்து படித்தாலும் முன்னிருந்து படித்தாலும் ஒரே சொல்லாக வரும் வகையில் பாடல் இயற்றிய ஒரு கலைஞன் மதன் கார்க்கி ஆக தான் இருப்பார். விநோதன் திரைப்படத்தில் வரும் “மேகராகமே… மேளதாளமே…” பாடல் தான் அது. அவசியம் கேளுங்கள்.
மதன் சிறந்த வசனகர்த்தாவும் கூட, எந்திரன், நண்பன் , தமிழில் Lion King, பாகுபலி, RRR என கிட்டத்தட்ட 20 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் . எல்லாம் Serious ஆக இருக்கும் படங்களாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம் ஆனால் முழுநீள நகைச்சுவை திரைப்படமான விஜய் சேதுபதியின் இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கும் இவரே வசனம், ” பிரெண்டு லவ் மேட்டரு பீல் ஆகிட்டாப்ல” என்ற வசனம் உங்களுக்கு கேட்கும் என நினைக்கிறேன்.
இன்னும் எவ்வளவு புகழ்ந்தாலும் மதன் கார்க்கிக்கு தகும், மட்டற்ற மகிழ்ச்சியோடு என்றும் தமிழ் தொண்டாற்றுங்கள்… மனநிறைவோடு வாழ்த்துகிறது சூரியன் FM. ஏனென்றால் உன் பிறந்தநாள்…!