காற்றுக்கு கூட செவி முளைக்க வைத்தவன், நடைபாதை கடைகளையும், மின்சார கம்பிகளையும் கவிதையாக்கி புகழ்ந்தவன், பாமர சொற்களை பாடலாக்கி மகிழ்ந்தவன்.
முகில் நீ, இமயம் நீ, நிலவு நீ, பூ நீ என்று கற்பனைகளை கவிதையாக்கி, எட்டா பொருளை எட்டும் கற்பனைகளால் தனதாக்கி கொள்வதற்காக படிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தையும் புறம் தள்ளி… அன்றாட வாழ்வில் நமக்கு நடக்கும், நாம் பார்க்கும் நிகழ்வுகளில் இருந்து சாமானியனுக்காக கவிதை வடித்த கவிஞர் நா.முத்துக்குமார்.
குறுகிய காலத்தில் திரை பாடல்களிலும், கவிதை உலகிலும் மாபெரும் புரட்சி செய்து காற்றோடு கலந்து போன பட்டு நகர குமாரனுக்கு இன்று 48வது பிறந்த நாள். நிறைய பாடலாசிரியர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் தமிழ் சினிமாவிற்கு நிறைய நிறைய நல்ல பாடல்களை தந்துள்ளனர். ஆனால் முத்துக்குமாரின் பங்களிப்போ அத்தனை பேரையும் தாண்டி தனித்துவம் வாய்ந்தது.
அதனால் தான் பாடல் எழுதிய சிறிது காலத்திலேயே சிறந்த படலாசிரியருக்கான 2 தேசிய விருதுகளையும் , 4 மாநில விருதுகளையும் அவர் வென்றார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை திரையில் படமாக காட்டும்பொழுது, அவன் வாழ்வில் கடந்துபோகும் நிகழ்வுகளே பாடல் வரிகளாக அமைந்தால் அந்த பாடல் தனக்காகவே எழுதப்பட்டதாக அந்த கதையோடு தன்னை ஒப்பிட்டு கொள்ளும் ஒருவன் எண்ணிக்கொள்வான்.
அப்படிப்பட்ட எளிய வரிகளை, தான் எழுதும் பாடல்களில் அமைத்து இன்றளவும் அந்த வரிகளை அனைவராலும் முணுமுணுக்க வைத்தவர் நா.முத்துக்குமார். காதல், காமம், பாசம், புரட்சி, சோகம், ஏக்கம் என எந்த மனநிலையில் நீங்கள் இருந்ததாலும் அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு ஒரு நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் கண்டிப்பாக கிடைக்கும்.
நம்மை சுற்றி உள்ள ஏதோ ஒன்றில் இருந்து நாம் நினைத்துக்கூட பார்த்திருக்காத சிலவற்றை பாடல் வரிகளாக்கி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பார். இவருடைய கவிதை படைப்புகள் கூட கிட்டத்தட்ட இவரது பாடல் வரிகளை போலவே எளிமையாகவும் அதே சமயம் ஆழமான கருத்துகளை உள்ளடக்கியதாகவுமே இருக்கும்.
தமிழ் கவிதை உலகை நீண்ட காலம் ஆட்சி செய்திருக்க வேண்டிய இந்த மகா கவிஞனை காலம் பறித்துக் கொண்டது துரதிஷ்டமானது என்றாலும், அவரது படைப்புகள் இன்று மட்டுமல்ல என்றென்றும் சிறப்புடன் கவிதை உலகையும், கலையுலகையும் ஆளும் .