இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாக்கள் அத்தனையிலும் காலம் காலமாக நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். அப்படி ஆண்களின் ஆட்சியில் அரிதாக எப்போதாவது தான் குறிஞ்சிப்பூ பூத்தது போல நடிகைகளின் எழுச்சியும் முக்கியத்துவமும் இருக்கும். அதுவும் சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் பல ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை வகுத்துக் கொண்டு தன்னிகரற்ற நடிகையாக இருக்கிறார் ஒரு நடிகை. அதுவும் தமிழ் சினிமாவில் என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அவர் டயானா மரியம் கூரியன்.
இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. ஆனால் இதுதான் அவரது நிஜப் பெயர். அப்படியெனில் சினிமாவுக்கான பெயர்? சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் 2003-ஆம் ஆண்டு “மனசினாக்கரே” என்ற மலையாளப் படத்தில் நடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டாவது தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த அந்த லேடி சூப்பர் ஸ்டாரின் சினிமா பெயர் நயன்தாரா.
2005-இல் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியானார். சீனியர் நடிகர்களின் நாயகி என்று ஆரம்பத்தில் பேசப்பட்டதை மாற்றும் வகையில், அவரின் அடுத்தடுத்த படங்கள் இளம் நடிகர்களுடன் அமைந்தது சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவகாசி, ஜீவாவுடன் ஈ, சிம்புவுடன் வல்லவன், அஜித் உடன் பில்லா என வரிசையாக இளம் நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.
அதே நேரத்தில் தமிழ் மலையாளம் படங்களைத் தாண்டி தெலுங்கிலும் கால் பதிக்கத் தொடங்கினார். இந்த சமயத்தில் தான் தமிழ் சினிமாவின் இளம் நடிகரான சிம்புவுடன் நயன்தாராவுக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்ததாக கோலிவுட் ரகசியமாக சொன்னது. அடுத்து பிரபுதேவா உடன் காதல்… சில ஆண்டுகளில் அந்த காதலும் பொய்த்து போனது.
தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளால் துவண்டு போன நயன்தாரா, இனி சினிமாவில் தொடர்வது கடினம் என எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அதை பொய்யாக்கிய நயன்தாரா, ஒரு பீனிக்ஸ் பறவையை போல சினிமாவில் மீண்டும் எழுந்தார். தமிழில் அடுத்தடுத்த படங்களில் வெற்றி நாயகியாக அவதாரம் எடுத்தார். தொடர் வெற்றிகளால் அவரது சம்பளமும் அந்தஸ்தும் உயர்ந்தன.
அதே நேரத்தில் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப தன்னையும், தன் நடிப்பையும் மெருகேற்றிக் கொண்டார். குறிப்பாக கோலமாவு கோகிலா, நானும் ரெளடி தான், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன், காத்து வாக்குல இரண்டு காதல், இமைக்கா நொடிகள், ஐரா, மாயா, நெற்றிக்கண் என அவரது நடிப்பிற்காகவே ஓடிய படங்களின் பட்டியல் நீளும்.
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் எல்லா தடைகளையும் தாண்டி தமிழ் சினிமா உள்பட தென்னிந்திய சினிமாக்களில் வெற்றிகரமான நடிகையாகவும் உச்ச நடிகையாகவும் திகழ்கின்ற நயன்தாரா, இப்போது ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிலும் கால் பதித்துள்ளார். மிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகின்ற நயன்தாரா 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு இந்தியா போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 சிறந்த புகழ் பெற்றவர்களில் ஒருவராக நயன்தாரா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு அரசின் விருது, ஆந்திர, கேரள அரசுகளின் விருதுகள் என பல விருதுகளை வாங்கி உள்ள நயன்தாரா Film fare விருதுகளையும் வாங்கி உள்ளார்.
இப்படி தன்னிகரற்ற நடிகையாக, தன்னம்பிக்கை மிக்க பெண்மணியாக, வீழ்ச்சியிலும் எழுச்சி கொண்ட வெற்றியாளராக வலம் வருகின்ற நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள். அவரின் பிறந்த நாளில் இன்னும் பல படங்களில் நடித்து வெற்றி பெறவும் விரைவில் தேசிய விருது போன்ற உயரிய விருதுகள் அவருக்கு கிடைக்கவும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை காற்றலையில் தெரிவித்துக் கொள்கிறது சூரியன் FM.