இந்திய சினிமாவின் ஒளிப்பதிவுத் துறையின் ஒளிவழி மன்னனாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சந்தோஷ் சிவன்..
இயக்குனர் மணிரத்னம் உள்பட பல இயக்குனர்களின் திரைப்படக் காட்சிகள் இன்றளவிலும் பேசப்படுவதற்கு காரணம், கேமிராவின் பின்னால் ஒளிந்திருக்கும் இவரின் உழைப்பே…
இழையோடும் இசையில் இயற்கை காட்சிகள், அதிகாலை விடியல், அந்தியில் கரையும் கதிரவன் என இவர் கேமிராக்கள் இளஞ்சிவப்பினை அள்ளிப் பூசிக் கொண்ட போதெல்லாம் இரு கண்கள் போதவில்லை என பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் பூரித்ததுண்டு.
உடைந்து சிதறும் கண்ணாடித் துகள்கள், தெறித்து விழும் நீர்த் துளிகள் என கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்லும் கணங்கள் அனைத்தையும் இவர் காட்சிகளாக்கிய போது, காட்சியோடே உறைந்து தான் போனான் ஒவ்வொரு ரசிகனும்..
காதல், சோகம், அழுகை, ஆக்ஷன் என நம் கண்முன்னே விரியும் பல காட்சிகளை, frame by frame என உணர்வுப்பூர்வமாய்க் கடத்தி பார்வையாளனின் மனதுக்கு நெருக்கமாக்கி காட்டுவதில் வித்தகர் சந்தோஷ் சிவன்…
தளபதி திரைப்படத்தின் காதல் பிரிகை காட்சியில், மனதை வருடும் இளையராஜாவின் இசையினூடே, அந்தி சிவந்த ஒரு பொழுதில் தன்னைக் கடந்து போன காதலியை திரும்பிப் பார்க்கும் நாயகன் உள்ளூர தனக்குள் உடைந்தழும் அக்காட்சி, பிரிவின் துயர்க்கதையை இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறது.. காலங்கள் கடந்தும் இன்றும் அது நம் மனக்கண்ணில் வரக்காரணம் இவரின் ஒளிப்பதிவே…
மணிரத்னமும் இவரும் என இந்த ‘இருவர்’ கைகள் கோர்த்த போதெல்லாம் காலத்தால் அழியாத படைப்புகளின் கணக்கு கூடிக்கொண்டே போனது..
காட்சிகளால் இவர் திரையினை ஆட்கொண்ட போதெல்லாம், விருதுகளால் இவரை அலங்கரித்து கர்வப்பட்டுக் கொண்டது கலைத்துறை.. கொண்டாடி தீர்த்துக்கொண்டது ரசிகர் பட்டாளம்…
ஒளிப்பதிவோடு ஓய்ந்திடாது இயக்குனராகவும் சில படங்களை இயக்கி அதிலும் தனித்தன்மையால் விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளி, தன் கலைப்பசியை போக்கிக் கொண்டார்..
எந்தக் கலைஞனுக்கும் காலப்போக்கில் தொய்வு உண்டாகலாம். ஆனால், இன்றும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால் அப்படத்தின் மதிப்பு தானே கூடிக்கொண்டே செல்கிறது…இவர் விழி வழி தொகுக்கப்பட்ட காட்சிகள் என்றால் அதற்காகவே திரையரங்குகளில் கூடும் ரசிகர்கள் இங்குண்டு..
மையிருட்டின் இடையே மெல்லிய கற்றையாய் ஊடுருவிப் பரவும் ஒளியாய், காட்சிகளை கவிதைகளாக்கி ரசிகர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் பத்மஸ்ரீ சந்தோஷ் சிவன் அவர்களுக்கு சூர்யன் FM ன் பிறந்தநாள் வாழ்த்துகள்…
காலங்கள் தாண்டி பேசும் சந்தோஷ் சிவன் என்ற கலைஞனின் படைப்பு…
Script Written by – Rafeek