ஒருத்தரால இவ்வளவு பாட்டு பாட முடியுமா? ஒருத்தரால இவ்வளவு பேரை தன்னோட குரலால வசியம் பண்ண முடியுமா? இவ்வளவு பேருக்கு இந்த ஒரு குரல் பிடிக்குமா? ஒருத்தரால இவ்வளவு பணிவா நடந்துக்க முடியுமா? ஒருத்தரால இவ்வளவு விருதுகளை வாங்க முடியுமா? ஒருத்தரால ஒரே துறையில் இத்தனை வருஷம் இருக்க முடியுமா? ஒருத்தரால தான் இருக்கக்கூடிய துறையில் பல வருஷமா முதல் இடத்திலேயே நீடிக்க முடியுமா?
இது அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் சித்ரா… சின்னக் குயில் சித்ரா. வீட்ல அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர். அதனால இவங்களும் ஒரு டீச்சர் ஆகணும்னு ஆசைப்பட்டுருக்காங்க. இவங்க கூட மியூசிக் கத்துக்கிட்ட நிறைய பேர் இப்ப பல இடங்களில் மியூசிக் டீச்சராவும் இருக்காங்க. ஆனா விதி, சினிமா இண்டஸ்ட்ரிக்கு சித்ரா கண்டிப்பா வேணும்னு இங்க கூட்டிட்டு வந்துடுச்சு.
இந்த கதைய அவங்களே நேர்காணல்கள்ல சொல்லிருக்காங்க… ”சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் போது ரோட்டரி கிளப் மாதிரியான Clubs-க்கு பாடப்போவேன். கொஞ்சம் பெரியவளான பின்னாடி மெல்லிசை கச்சேரில பாடினேன். அந்த சமயத்துல தான் ஜேசுதாஸ் Sir கூட அறிமுகம் கிடைச்சுது. நான் மலையாளத்துல ஜேசுதாஸ் Sir கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடினேன். அத பாத்துட்டு இளையராஜா Sir இசைல பாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது.
நடிகர் பகத் பாஸிலோட அப்பா பாசில் டைரக்ஷன்ல பூவே பூச்சூடவா படத்துல பாடறதுக்காக கூப்பிட்டாங்க. ஆடிஷன் பண்ணாங்க. நான் ஏதோ ஜோக் பண்றாங்கனு நினைச்சுட்டு அத பெருசா எடுத்துக்கல. அப்பறம் மறுபடி போன் பண்ணி பாட வர சொல்லிட்டாங்க.
ஆனா அந்த படத்துல நான் முதல்ல பாடல. பாரதிராஜா சார் டைரக்ஷன்ல நீ தானே அந்த குயில் படத்துல தான் முதன் முதலா நான் பாடுனேன். அதுவும் இளையராஜா சார் இசைல தான். அப்ப ஆரம்பிச்ச பயணம் 40 வருஷமா தொடர்ந்து போயிட்டு இருக்கு. 25 ஆயிரம் பாட்டுக்கு மேல பாடி இருக்கேன்” அப்படின்னு ரொம்ப பணிவா அவங்களோட வாழ்க்கை வரலாற சொல்லிருக்காங்க.
சித்ரா அவர்களுடைய பணிவான இந்த குணமும், பேசும்போதே இசையா வரக்கூடிய அந்த குரலும், இன்னும் கோடி பேரை வசியம் பண்ணக் கூடிய சக்தி கொண்டது. இத மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. சின்னக் குயில் சித்ரா இன்னும் பல்லாயிரம் பாடல்களை பாடிப் பறந்திட வாழ்த்துக்கள்!