நடிகர்களுக்கு ரசிகன் இருப்பது ஆச்சர்யம் இல்லை.. ஆனால் ரசிகர்களுக்காக ஒரு நடிகன் நண்பனாக இருக்கின்றார் என்றால் அவர் சிலம்பரசன் என்னும் சிம்பு தான்…
“நடித்த படங்கள் தோல்வி ஆகின்றன…, நடிக்கவிருக்கும் படங்கள் தள்ளிப் போகின்றன…, வயதாகிக் கொண்டே போகிறது…, சரியான நேரத்திற்கு ஷூட்டிங்க்கும் வருவதில்லை…, உடம்பு பெருத்து விட்டார்…, இனி இவர் சாதிக்க முடியாது சினிமாவில்”, என்று சொல்லிய அனைவருக்கும் 2021 துவக்கத்திலேயே உடம்பு குறைத்து வெறும் 35 நாட்களில் ஒரு நல்ல குடும்பப் படத்தை நடித்துக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார் சிலம்பரசன்.
இதனை சாத்தியமாக்கிய ஈஸ்வரன் படத்தில் நடித்த நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குனர், குழந்தை நட்சத்திரங்கள் உட்பட திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் தங்க காசு கொடுத்து நன்றி பாராட்டியிருக்கிறார் .
“பத்து தல”, சிம்புவின் அடுத்த படத்தின் தலைப்பு. நிஜமாகவே சிம்பு பத்து தல ராவணன் தான், நடிப்பு நடனம் எழுத்து இசை இயக்கம் என சினிமாவின் பலதுறைகளிலும் முத்திரை பதித்த ராவணன், சிம்பு. ஆனால் போதும் STRபுராணம், நிறையவே நமக்கு தெரிந்திருக்கும், இனி வரும் வரிகள் சிலம்பரசன் பற்றி மட்டுமல்ல, தன் வாழ்வில் தவிர்க்கவோ பிரிக்கவோ முடியாத அவர் ரசிகர்களுக்காகவும் தான்.
எல்லா நடிகர்களுக்கும் தான் கூட்டம் இருக்கிறது என்று தோன்றலாம், ஆனால் இந்த கூட்டம் சிம்பு வெற்றி பெற்று எழும்போதெல்லாம் கூடிய கூட்டமல்ல, அவர் விழும்போதும் கூட தாங்கிய கூட்டம். சிம்புக்கு சினிமாவின் காரணமாக மட்டும் ரசிகர்கள் சேரல, அவரின் அன்பிற்கும் ஆக்கப்பூர்வமான சமூகத்தின் மீது கொண்ட அக்கரைக்கும் தான் பலபேரின் கவனத்தை ஈர்த்தார் STR.
இன்றளவும் தமிழகத்தில் கிளம்பிய பெரும் புரட்சியென்றால் அது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தான். பல தீப்பந்துகள் சேர்ந்து அந்த காட்டுத்தீயை உருவாக்கின, அதில் முக்கியமான தீக்குழம்பு STR வீசியது, தன் ரசிகர்களை ஜல்லிக்கட்டை ஆதரித்து ஒரு 5 நிமிடம் தங்கள் வீடு வாசலில் வந்திருக்க சொன்னார். அந்த சமயத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது,
அதன் பின் காவேரி பிரச்சனையின் போது #UniteForHumanity னு ஒரு ஹாஸ்டேக்ல தமிழர்களுக்கு தண்ணீர் தர விரும்புற கன்னடர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டோவா பதிவிட சொன்னார். ஆரம்பத்தில் முக்கால்வாசி பேர் கலாய்க்க தான் செய்தார்கள், ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான கன்னடர்கள் பதிவேற்றம் செய்தனர்.
ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி, சிம்புவுக்கு விருதுவழங்க மேடையில் காத்திருக்கிறார், சிலம்பரசன் மேடை ஏறி அந்த விருதை கூட்டத்தில் இருந்த தன் ரசிகனை பெற செய்து பின் தன் ரசிகனிடமிருந்து பெற்றுக்கொண்டார், தன் ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் கொடுத்த பெரும் கௌரவம் மட்டும் அல்ல, தன் ரசிகர்களால் தான் தலைவனாக இருக்க முடிகிறது என்பதை உணர்ந்திருக்கிறார் சிம்பு.
இதெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ஒரு விஷயம் செய்தார் சிம்பு, தன் ரசிகர் ஒருவர் எதிர் பாராதவிதமாக மரணித்த செய்தி கேட்டு, அவரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார், வழியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கின்றார்கள் இறந்தவரின் நண்பர்கள், சிம்பு தானும் இறங்கி தன் ரசிகனுக்காக எஞ்சி உள்ள போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்.
தலைவனுக்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பல கோடி இருக்கும், ஆனால் ரசிகனுக்காக தலைவன் ஒட்டிய போஸ்டர் அவை மட்டும் தான். இதெல்லாம் ஒன்னும் இல்ல, அவர் அப்படியொண்ணும் பெருசா செஞ்சிடல, அவர் எத்தனை தப்பு பண்ணிருக்காரு தெரியுமான்னு சொல்றவங்க கண்ணாடியை பார்க்கவும், எல்லோரும் தான் தப்பு செய்றோம், வெளிச்சம் படுறவன மட்டும் காயப்படுத்துறோம்.
ரசிகர்களுக்காக நிற்கும் சிம்புவின் இந்த பிறந்தநாளுக்கு அவரின் அடுத்த படமான மாநாடு திரைப்படத்தின் டீசரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்புவிற்கு மட்டுமல்ல, அவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த பிறந்த நாள் பரிசு…
யோசிச்சு பாத்தா சிம்பு நமக்கு சொல்றது ரெண்டே விஷயம் தான், “உன்ன நீயே நம்பு, ஊருக்கு செய் அன்பு”, அது தான் சிம்பு. #HappyBirthdaySTR
Article By – Roopan Kanna