இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தனது தனித்துவமான இசையாலும் வித்தியாசமான நடிப்பினாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த “சுக்ரன்” திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார் விஜய் ஆண்டனி. அப்படத்தில் அமைந்த “சாத்திகடி போதிக்கடி” பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பின் டிஷ்யூம், நான் அவன் இல்லை, பந்தயம் போன்ற படங்களில் பல ஹிட் பாடல்களை இசையமைத்தார்.
2008ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அமைந்த “நாக்கு முக்க” பாடல் விஜய் ஆண்டனியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இப்பாடல் தமிழ் மட்டுமின்றி உலக அளவில் மெகா ஹிட் பாடலாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் இசை அமைப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.
2009ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் தளபதியுடன் இணைவதற்கான வாய்ப்பு முதன்முறையாக விஜய் ஆண்டனிக்கு கிடைத்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்ததால் வேலாயுதம் திரைப்படத்தில் இசையமைக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. வேலாயுதம் திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி இசை அமைப்பது மட்டுமின்றி பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். அந்த வகையில் அவர் பாடிய டைலாமோ, நாக்கு முக்க, ஆத்திச்சூடி, உசுமலாருசே, உலகினில் மிக உயரம், மஸ்காரா, நூறு சாமிகள், தங்கமா வைரமா போன்ற பாடல்கள் கேட்போர் மனதை விட்டு நீங்காத பாடல்களாக அமைந்தது.
சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி 2012ஆம் ஆண்டு நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். “நான்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தன் முதல் படத்திலேயே தான் ஏற்று நடித்த சலீம் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் ஒரு நல்ல நாயகனாக இடம்பிடித்தார். நான் படத்தை தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் எனப் பல்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கதைகளில் நடித்தார். இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த “கொலைகாரன்” திரைப்படம் தான் கடைசியாக இவர் நடித்து வெளிவந்த திரைப்படம்.
இவர் நடித்த அண்ணாதுரை மற்றும் திமிரு பிடிச்சவன் திரைப்படத்திற்கு இவரே எடிட்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர வரிசை கட்டிக் காத்திருக்கும் திரைப்படங்கள். கேன்ஸ் கோல்டன் லயன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருது வாங்கிய முதல் இந்தியன் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இசை அமைத்தாலும் நடித்தாலும் அப்படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட விஜய் ஆண்டனி அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் இணையத்தில் #HappyBirthdayVijayAntony #HBDVijayAntony #VijayAntony என கொண்டாடி வருகின்றனர்..