Cinema News Stories

கோவையின் குறையை போக்கிய ’ஆத்மிகா’

Aathmika latest stills

சத்யராஜ், ரகுவரன், நிழல்கள் ரவி, சூர்யா, கார்த்தி, மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் போன்ற பல திரை நட்சத்திரங்கள் கோவை மண்ணின் மைந்தர்களாக இருந்து திரை உலகில் பிரபலமான நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சினிமாவில் கோவையில் இருந்து சென்ற நடிகைகளில் கோவை சரளாவை தவிர வேறு யாரும் அவ்வளவு பிரபலமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த குறையை போக்குகின்ற வகையில் 2017 ஆம் ஆண்டு வந்த ஒரு திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக பலராலும் போற்றப்பட்ட ஒரு நடிகையைப் பற்றி தான் இப்போது நாம் பேசப்போகிறோம். அந்த நடிகை பிறந்தது கோவை என்றாலும் படித்தது எல்லாம் சென்னை வைஷ்ணவா கல்லூரியில். படிக்கும் பொழுதே அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் பல குறும்படங்களில் அவர் நடித்தார்.

அப்படி அவரை குறும்படங்களில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ராஜு மேனன். அதே நேரத்தில் மாடலிங் தொழிலிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இப்படி குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒருவரைத்தான் 2017 ஆம் ஆண்டு பாடகர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனருமாக விளங்குகின்ற ஹிப் ஹாப் தமிழா தனது முதல் படமான மீசையை முறுக்கு படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்தார்.

அந்தப் படத்தில் நடித்தவர் தான் கோவையை பிறப்பிடமாகக் கொண்டு சென்னையில் படிப்பை தொடர்ந்து குறும்படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்த நடிகை ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பரவலாக வரவேற்பை பெற்ற ஆத்மிகாவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தன.

2017 ஆம் ஆண்டு தனது இரண்டாவது படமான நரகாசுரன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடி இருந்தார். ஆனால் அந்த படம் வெளிவருவதில் பல சிக்கல்கள் இருந்தன. 2022 ஆம் ஆண்டு காட்டேரி என்ற திரைப்படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக அவரும் நடித்திருந்தார். சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா என மூன்று நடிகைகளில் ஒருவராக அவரும் நடித்திருந்தார்.

இவர் ஏற்று நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஓவியா. பல காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டு ஓவியாவின் இடத்திற்கு ஆத்மிகா அழைக்கப்பட்டு அந்த படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் உடன் ஜோடி சேர்ந்த ஆத்மிகா கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணனுடைய இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க கோடியில் ஒருவன் படத்திலும் ஆத்மிகா நடித்தார். 2023 ஆம் ஆண்டு உளவியல் படமாக வந்த திருவின் குரல் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிற ஆத்மிகா சிறந்த நடிகையாக, அழகான பாடகியாக மாடலிங் ஆக விளங்குகின்ற இவருடைய பிறந்த தினம் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகின்ற அதே நேரத்தில் அவருடைய திரை பயணத்தில் பல வெற்றிப் பூக்கள் மலர்ந்து பல மகுடங்கள் அவர் பெற வேண்டும் என்று சூரியன் எப்எம் தன் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K.S.Nadhan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.