இவர் ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்த நாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதைதான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான்.
திரையிசைக்கென்றே ஒரு கிளாஸிக்கல் அந்தஸ்தை கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். டிரினிடி கல்லூரியின் ஸ்காலர்ஷிப்பில் இசை பயின்ற ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக்கொண்டிருந்த ரஹ்மானை, 1992 ஆம் ஆண்டு தனது ரோஜா படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.
முதல் படமே மாபெரும் வெற்றி. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகனை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டின. அதன் விளைவு – முதல் படத்திற்கே தேசிய விருது பெற்று பட்டையைக்கிளப்பினர் ரஹ்மான். தமிழில் மட்டும் நிற்கவில்லை ரஹ்மானின் வெற்றி. மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து அவர் இசை ஒலித்தது. உலகின் மிகப்பெரிய இசைத்துறையான ஹாலிவுட் பக்கமும் வீசியது இந்தப் புயல்.
இன்று இந்தியாவைப் பற்றி பேசும்போது பின்னணியில் ‘ஜன கன மன…’ ஒலிக்கிறதோ இல்லையோ ‘ஜெய் ஹோ’வும், வந்தே மாதரமும் நிச்சயம் ஒலிக்கும். அந்த அளவிற்கு அப்பாடல்களில் உயிர்ப்பைக் கூட்டியிருப்பார். அது தான் ரஹ்மானின் மேஜிக்கல் டச்.
போறாளே பொன்னுத்தாயி… என்று அழவைப்பார், மன மன மன மென்டல் மனதில் என குதூகலிப்பார், சிநேகிதனே… என்று உருகவைப்பார், காதல் ரோஜாவே… என கலங்கடிப்பார். இவரது இசை வெறும் சப்தம் அல்ல. அது உணர்வுகளின் வேறொரு பரிணாமம்.
கடலில் காற்றழுத்தம் தோன்றும்பொழுது புயல் உருவாகும். மன அழுத்தம் தோன்றும்பொழுது இசைப்புயலின் இசை நிச்சயம் மருந்தாகும். என்றைக்கும் மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெற்று சாதனைகளை தன் பின்னே காத்திருக்க வைத்திருக்கும் இந்த இசைப்புயல், தன் வலுவை இழக்காமல் உலகெங்கும் வீசிக்கொண்டே இருக்க அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறது சூரியன் பண்பலை.