Cinema News Stories

கோவையில் இருந்து புறப்பட்ட இளம் சினிமா எக்ஸ்பிரஸ்!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் மிக முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ். கோவை மாநகருக்கும், பொள்ளாச்சி நகருக்கும் இடையில் இருக்கின்ற கிணத்துக்கிடவு தான் லோகேஷ் கனகராஜ் பிறந்த இடம்.

பழனியம்மாள் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்த லோகேஷ் தனது கல்லூரி படிப்பை பிஎஸ்ஜி அறிவியல் கலை கல்லூரியில் முடித்தார். பேஷன் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்த லோகேஷ் வங்கிப் பணிக்கு போனாலும் அவருடைய எண்ணம் எல்லாம் சினிமாவின் மீது இருந்தது. 2012 இல் முதன்முதலாக அவர் ஒரு குறும்படம் எடுத்தார். அந்த திரைப்படம் ‘அச்சம் தவிர்’.

நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது. அந்த படத்திற்கு நீதிபதியாக வந்த கார்த்திக் சுப்பாராஜ் இயக்குனர், லோகேஷ் கனகராஜுடைய இயக்கத்தை பெரிதும் பாராட்டினார். அதற்கடுத்து இரண்டாவது குறும்படமாக களம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அவியல் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜை வைத்து தயாரித்தார்.

இப்படி குறும்படங்களில் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜின் வாழ்க்கை குறும்படங்களில் இருந்து திரையரங்குக்கு முன்னேறியது 2018 ஆம் ஆண்டு மாநகரம் படம் மூலம். வித்தியாசமான கதைக்களத்துடன் இறங்கிய லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தில் புது முகங்களை நடிகர்களை அறிமுகம் செய்ததோடு கதைக்களங்களை மாற்றி மாற்றி காமித்து இறுதியில் ஒரே நேர் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

அந்த படம் மக்கள் மத்தியில் புதிய யுக்தியில் வந்த ஒரு படமாக பார்க்கப்பட்டது. இதன் மூலம் மாநகரம் படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. மூன்று ஆண்டுகள் இடைவெளியில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம், அவரை சினிமாவின் மிக மிக முக்கியமான இயக்குனராக மாற்றிப் போட்டது.

அந்த படம் 2021 இல் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “கைதி ” திரைப்படம். ஒற்றை இரவில் நடக்கின்ற கதையாக கைதி திரைப்படம் எடுக்கப்பட்டது ஒட்டுமொத்த போலீசையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு ஒரு கைதியிடம் ஒப்படைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கே முடியாத அளவுக்கு ஒரு புதியதான ஒரு கற்பனையை தனது கதை கருவாக எடுத்துக்கொண்ட லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை மிக மிக நேர்த்தியாக எடுத்தது மட்டுமல்லாமல், பெரும் வெற்றி படமாக வசூலில் சாதனை படைக்க வைத்தார்.

ஒரு சிறுகதையை கூட லாவகமான பெரும் கதையாடலாக கொண்டு போகின்ற திறமை லோகேஷ் கனகராஜுக்கு இருப்பதை கைதி திரைப்படம் மூலம் சினிமா வட்டாரம் புரிந்து கொண்டது. மீண்டும் அவருக்கு இன்னொரு மிக முக்கியமான திரைப்படம் என்றால் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து எடுக்கப்பட்ட “மாஸ்டர்” திரைப்படம்.

அந்த இரு நடிகர்களுஉடைய வாழ்க்கையில் இந்த திரைப்படம் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கும். அந்த அளவுக்கு மாஸ்டர் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. உலக சினிமா தரத்திற்கு தமிழ் படத்தையும் உயர்த்தி நிறுத்துகின்ற ஆற்றல் கொண்டவரான நடிகர் “கமல்ஹாசன்” தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை லோகேஷ் கனகராஜ் இடம் கொடுத்தார்.

அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜுடைய படம் இயக்கும் தன்மையும் திறமையும் மேலோங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் ஒரு புதுமுக இயக்குனர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுத்தாலும் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் மீது முழு நம்பிக்கையும் வைத்து தனது ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் “விக்ரம்” என்ற திரைப்படத்தை எடுத்தார்.

தான் எதிர்பார்த்ததைப் போன்றே மிகத் துல்லியமாக அந்தப் படத்தின் வெற்றி அமைந்ததற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என்பதை கமல் உணர்ந்திருந்தார். மிகப்பெரும் வசூல் வெற்றியோடு மட்டுமல்லாமல் பல மொழிகளில் விக்ரம் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடத்திலும் வெற்றிகளை குவித்தது.

இப்படி தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் 2023-ல் அடுத்த படம் விஜய்யை வைத்து “லியோ” என்ற பெயரில் எடுத்தார். அந்தப் படமும் பெரும் வெற்றியையும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது. இப்படி தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ் சொந்தமாக படம் தயாரிக்கவும் இப்போது ஆரம்பித்து விட்டார்.

கோவையில் இருந்து புறப்பட்ட இந்த இளம் சினிமா எக்ஸ்பிரஸ் தனது வேகத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே போகிறது என்பதுதான் நிஜம். தமிழ் திரைப்பட இயக்குனர்களில் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுகின்ற லோகேஷ் கனகராஜின் பிறந்த தினம் மார்ச் 14. அவருடைய பிறந்த தினமான இன்று, இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது சூரியன் எப் எம்.

Article By RJ K S Nadhan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.