சிறந்த இயக்குனராக, சிறந்த நடிகராக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டவராக, பின்னணி குரல் கொடுப்பவராக, தயாரிப்பாளராக என பன்முகம் கொண்டவராக விளங்கிய மனோபாலா எனும் இயக்குனர் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அவருடைய பிறந்த தினம் 1953 டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, இதே நாள் தான். மனோபாலா நாகர்கோவிலில் பிறந்தார். ஆனால் தன்னுடைய ஆரம்ப கால பள்ளிப்படிப்பை பெங்களூரிலும் பின்னர் தஞ்சாவூர் அருகில் இருக்கின்ற திருக்காட்டுப் பள்ளியிலும் தொடர்ந்தார். கல்லூரி காலங்களில் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு பல கட்டுரைகளையும், கதைகளையும் புனைப்பெயரில் எழுதினார்.
அந்த புனைப்பெயர் தான் அவரை பின்னாளில் தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. ஆம்” மனோபாலா” என்பது அவரது புனைப்பெயர். அவரது இயற்பெயர் “பாலச்சந்தர்”. பாலச்சந்தர் என்ற மனோபாலா வீணை இசைக் கலைஞராகவும் பரதநாட்டிய கலைஞராககவும் திகழ்ந்தார் என்பது கூடுதல் செய்திகள்.
1970-களில் இளம் வயதினர் எல்லோரும் சினிமாவில் வரத் துடித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டமாக இருந்த அந்த சமயத்தில் கமல்ஹாசன் என்ற ஓர் இளைஞரோடு சேர்ந்து சினிமா தொடர்புடைய பலரோடு தனது தேடல் பயணத்தை ஆரம்பித்தார். அப்போதுதான் கமல்ஹாசன் மூலமாக பாரதிராஜா என்ற ஒருவர் அவருக்கு அறிமுகமானார்.
அப்போதுதான் அவரும் 16வயதினிலே என்ற படத்தை எடுத்து அடுத்தடுத்து படங்களை எடுக்கின்ற முயற்சிகளில் இருந்தார். அவரிடம் உதவி இயக்குனராக மனோபாலா சேர்ந்தார். அப்படித்தான் அவர் 1979 இல் “புதிய வார்ப்புகள் “என்ற படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குனர்களில் ஒருவராக பணியில் அமர்ந்தார்.
அந்தப் படத்தில் உதவி இயக்குனர் “பாக்கியராஜ்”, கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார். இப்படி 79 இல் புதிய வார்ப்புகள் மூலம் தன்னை சினிமாவில் இணைத்துக் கொண்ட மனோபாலா, தன்னுடைய அபாரமான ஆற்றலாலும் நுணுக்கங்களை கற்றுக் கொள்கின்ற ஆர்வத்தாலும் 1982-ல் ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார்.
அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியது பாரதிராஜாவின் இன்னொரு மிக முக்கியமான இயக்குனராக விளங்கிய “மணிவண்ணன்”. கார்த்திக் சுஹாசினி ஜோடியாக நடித்தார்கள். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்படமாக அமையாமல் தோல்வியை கொடுத்தது. மனம் தளராத மனோபாலா 1985 இல் 3 ஆண்டுகள் கழித்து மோகன் ராதிகாவை வைத்து “பிள்ளை நிலா” என்ற ஒரு திரைப்படத்தை எடுத்தார்.
அந்தப் படம் ஒரு பெரும் வரவேற்பை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்குப் பின்னால் தான் அப்பொழுது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து கொண்டிருந்த ‘ரஜினிகாந்தை’ வைத்து “ஊர்க்காவலன்” படத்தை எடுத்தார். அந்தப் படமும் ஒரு பெரும் வெற்றியை பெற்றது.
2 ஆண்டுகள் கழித்து 89 இல் விஜயகாந்த், சுஹாசினி, ரேகா இவர்களுடைய நடிப்பில் “என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்” என்ற படத்தை எடுத்தார். அந்த படம் ஹிந்தியில் மீண்டும் எடுக்கப்பட்டது. ஹிந்தியில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். தொடர்ந்து மனோபாலா அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.
இப்படி மனோபாலா இயக்கிய படங்களினுடைய எண்ணிக்கை 24. 24 படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவரை மக்களிடத்தில் பிரபலப்படுத்தியது அவரது நடிப்புதான். மனோபாலா தன் வாழ்நாளில் நடித்த படங்களின் எண்ணிக்கை 700. சின்ன சின்ன படங்களாக வேடங்களாக இருந்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார்.
அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கின்ற வாய்ப்புகளை பெற்றார். வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற பல நகைச்சுவை நடிகர்களோடு கூட்டணி சேர்ந்து மறக்க முடியாத பல நகைச்சுவை காட்சிகளில் தன்னை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.
இயக்குனராக கதாசிரியராக நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்தார். 2014 இல் வினோத் இயக்கத்தில் வெளிவந்த “சதுரங்க வேட்டை” படம் மூலம் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த மனோபாலா, அந்தப் படத்தில் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பாம்பு சட்டை என்ற படத்தையும் எடுத்தார்.
அதே நேரத்தில் “வேஸ்ட் பேப்பர்” என்ற Youtube சேனலையும் ஆரம்பித்தார். மனோபாலாவின் தேகம் மிக மெலிதான மெலிந்த தேகமாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு சினிமாவில் சாதிப்பது என்பது ஒரு இயலாத காரியமாக கருதப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் அவருடைய ஆரம்ப காலங்களில் ஏற்பட்டிருக்கலாம். அவமானங்களை பார்த்திருக்கலாம்.
ஆனால் அதை எல்லாம் தாண்டி தன்னுடைய குறைபாடுகளாக கருதப்படுகின்ற அந்த மெலிந்த தேகத்தை வைத்து அவர் 24 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிப்பில் தன்னுடைய உடல் பாவனையின் மூலம் பல்வேறு மக்களை கவர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மனோபாலாவின் தன்னம்பிக்கை தான் அவரை மேலும் மேலும் உயர்த்தி இன்று நாம் பேசுகின்ற வகையில் அவரை சிகரத்தில் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மனோபாலா தனது 69 வது வயதில் 2023 மே மாதம் 3 ஆம் தேதி தனது சென்னை இல்லத்தில் மாரடைப்பால் இறந்து போனார்.
மனோபாலா என்ற மனிதனை நினைக்கின்ற பொழுது, தனது முதல் படமே பெரும் தோல்வி கண்டாலும் தொடர்ந்து தனது தன்னம்பிக்கையாலும் , விடாமுயற்சியாலும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர்கள் வரிசையில் தன் பெயரையும் பதிய வைத்துள்ளார் என்பது தான் நியாபகம் வருகிறது.
தன்னுடைய நகைச்சுவை கலந்த உணர்வாலும், நடிப்பாலும், மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறார். மிக மென்மையான, அன்பான, யாரிடமும் அதிர்ந்து பேசாத அவருடைய நல்ல குணங்கள் தான் அவரை இந்த அளவுக்கு புகழ் பெற வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மனோபாலாவின பிறந்த தினமான டிசம்பர் 8 இன்று அவரை கொண்டாடுவதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.