பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் அதுமட்டுமில்லாமல் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனும் கூட. இவருடைய வேகமாக நடனமாடும் திறமை இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரை வாங்கிக்கொடுத்ததுன்னுதான் சொல்லணும்.
இவருடைய முதலாவது நடனம் வெற்றிவிழா திரைப்படத்தில் அமைந்தது. இவர் இன்னைக்கு வரைக்கும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியிருக்கிறார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இவர் நடனமாடிய வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை பெற்றிருக்கிறார்.
நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னிநட்சத்திரம் மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும், முரளி நடித்த இதயம் படத்தில் ஏப்ரல் மேயிலே பாடலில் முதன்மை நடனக்கலைஞராக அறிமுகமாயி பெயரும் வாங்கினார்.
ஜென்டில்மேன் படத்தில் இவர் ஆடிய நடனம் இவரை முன்னுக்கு வரவைத்ததுன்னு தான் சொல்லணும். அந்த படத்துல இவர் ஆடிய சிக்கு புக்கு ரயிலு இன்றும் நம்மை ரசிக்கவைக்கும். பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்துல கதாநாயகனாகி இளைஞர்கள் மனசுல இடம்பிடித்தார்னே சொல்லலாம். காதலன் திரைப்படம் தமிழ்ல மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
பிரபுதேவா பல படங்கள்ல நடித்திருந்தாலும் அவருடைய நடிப்புத்திறனை ஏழையின் சிரிப்பில் படத்தில் பார்க்கலாம். நடன இயக்குனராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வெற்றிபெற்றவர் பிரபுதேவா. அவருடைய கலை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க மனமார வாழ்த்துவோம்.