இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவர் என்றும் போற்றப்படுகிவரான ராகுல் டிராவிட் பிறந்த தினம்(ஜனவரி 11) இன்று. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் தான் ராகுல் டிராவிட் பிறந்த ஊர். அப்பா சரத் ட்ராவிட், அம்மா புஷ்பா. பிறந்தது மத்திய பிரதேசமாக இருந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தான்.
தந்தை சரத் ட்ராவிட் ஒரு ஜாம் கம்பெனியில் வேலை செய்தார். அம்மா புஷ்பா விஸ்வேஸ்வரய்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்த பொழுதுதான் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. 12 வயது இருக்கின்ற பொழுதே 15 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் கர்நாடகா சார்பில் இவர் விளையாடத் தொடங்கினார்.
கெக்கி தாராப்பூர் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் தான் ராகுல் டிராவிட்டின் விளையாட்டு திறமையை கண்டறிந்தவர். அவருடைய பயிற்சியின் கீழ் கர்நாடக அணியின் சிறுவர்களுக்கான பிரிவில் டிராவிட் விளையாடத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை போட்டியில் கர்நாடகா அணி சார்பில் ராகுல் டிராவிட் விளையாடினார். அப்போது அவர் உடன் விளையாடிய சக விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அணில் கும்ப்ளே மற்றும் ஜகவல் ஸ்ரீநாத்.
அந்த போட்டித் தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 82 ரன்கள் மற்றும் ஒரு சதம் அடித்து எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார். அதன் மூலம் அவர் தென்னிந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடினார். 1994-95 இந்தியா ஏ அணியில் இணைந்து இங்கிலாந்து ஏ அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 1994 அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலாக ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினார்.
அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் கூட 96 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதே ஆண்டு நடந்த ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக விளையாடிய போது வெறும் மூன்று ரன்களில் வெளியேறினார். அதே சமயம் இரண்டு கேட்ச்களை பிடித்தார். அடுத்த மேட்சில் நான்கு ரன்களோடு வெளியேறினார். 1996-98 இல் அவருடைய முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது.
டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடினார். அப்போது அதில் 40 ரன்கள் எடுத்திருந்தார். 96 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாடினார். பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 92 ரன்கள் எடுத்து சாதனை புரிந்திருந்தார். 98 -99 இல் 7 ஆட்டங்களில் ராகுல் டிராவிட் 752 ரன்கள் எடுத்திருந்தார். 2000 ஆம் ஆண்டு அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கப் போட்டியில் அவர் விளையாடினார். 2002 -2006 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. அந்த காலகட்டங்களில் அவர் இந்திய அணியில் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரராக கருதப்பட்டார். 8,914 ரன்கள் 177 போட்டிகளில் அவர் எடுத்திருந்தார். இதில் 19 சதங்கள் அடங்கும். 2007 ஆம் ஆண்டு அவர் இந்திய அணியின் தலைமை பொறுப்புக்கு வந்தார். அப்போதுதான் உலகக்கோப்பை நடைபெற்றது.
ஆனால் அதில் இந்தியா தோல்வியடைந்தது. அதற்கு பின்பு தனது ஓய்வை அறிவித்த ராகுல் டிராவிட் 2014 இல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக அமர்த்தப்பட்டார். அந்த வருடம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஏ அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆனால் 2018 இவருடைய பயிற்சியின் கீழ் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.
இவருடைய பயிற்சியின் கீழ் இப்பொழுது பிரபல விளையாட்டு வீரர்களாக இருக்கின்ற ரிஷப் கான், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் போன்றோர் இவரது பள்ளி பாசறையில் படித்தவர்கள் தான். நான்கு ஆண்டுகள் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உயர்ந்திருக்கிறார்.
இவருடைய பயிற்சியின் கீழ் தான் இந்திய அணி 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் கடைசிவரை தோல்வியே தழுவாமல் இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றி வாய்ப்பை நூல் இழையில் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ; சிறந்த பயிற்சியாளராக விளங்குகின்ற ராகுல் டிராவிட் பிறந்த தினமான இன்று அவரை வாழ்த்துவதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.