2023 ICC கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டம் லீக் சுற்றுகளில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கும் நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கும் இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இதே நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய இந்தியா இந்த முறை திருப்பி கொடுக்கும் முனைப்போடும், நூலிழையில் கடந்த முறை கோப்பையை நழுவவிட்ட நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த இந்தியா அணியை எப்படியாவது தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற துணிச்சலோடும் அரையிறுதி போட்டியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவான மைதானம் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மாவும், கில்லும் வழக்கம் போல் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கோலி தனது பாணியில் நிதானமான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார்,
எதிர்பாராத விதமாக 23 வது ஓவரில் கால் வலி காரணமாக தனது அரை சதத்தை கடந்த சுப்மன் கில் பெவிலியன் திரும்ப, கோலியோடு கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் ரன்களை அதிரடியாக குவித்தார் . தனது 50 வது சதத்தை அடித்த விராட் கோலி, 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்,
117 ரன்களில் கோலி வெளியேற, அடுத்து வந்த ராகுலும் தனது பங்குக்கு அதிரடி காட்டினார். ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடிக்க, 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்தது இந்திய அணி. 398 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்திற்கு ஆரம்பமே சறுக்கல் தான், தொடக்க வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ஆகியோர் முகமது ஷமியின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
மூன்றாவது விக்கெட்டிற்க்கு ஜோடி சேர்ந்த மிட்சல் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஜோடி நிதனமாக தொடங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர், பிறகு ஒரு புறம் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய மிட்சல் இந்திய வீரர்கள் வீசிய பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். மறுபுறம் வில்லியம்சன் நிதானமாக ஆடினார், ஒரு கட்டத்தில் இந்திய வீரர்கள் இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமலும், ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறினர்,
அதுமட்டுமின்றி பும்ரா ஓவரில் மிட்சலின் ஒரு சுலபமான கேட்ச்சை தவறவிட்டார் ஷமி. சில பீல்டிங் சொதப்பல்களும் இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய மிட்சல்-வில்லியம்சன் ஜோடி 3வது விக்கெட்டிருக்கு 181 ரன்களை குவித்தது, மிட்சல் சதம் விலாச வில்லியம்சன் அரை சதத்தை கடந்தார். இந்த ஜோடி தொடர்ந்தால் கண்டிப்பாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று வர்ணனையாளர்களே பேச ஆரம்பித்தனர்.
20வது ஓவரில் இருந்து 33வது ஓவர் வரை இவர்களின் அதிரடியில் மும்பை மைதானமே கதிகலங்கி இருந்தது. 33வது ஓவரை மீண்டும் வீச வந்த முகமது ஷமி வில்லியம்சனின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இவர்கள் இருவரின் ஜோடியை பிரித்தது மட்டுமில்லாமல் அதே ஓவரில் அடுத்து வந்த லத்தமின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அதன் பின் வந்த வீரர்களில் பிலிப்ஸை தவிர வேறு யாரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. சதம் விளாசி அதிரடி காட்டிய மிட்சலும் 134 ரன்னில் ஷமி பந்தில் வெளியேறினார். கடுமையாக போராடிய நியூசிலாந்து 48.5 ஓவரில் 327 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முகமது ஷமி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
உலகக் கோப்பை முதல் நான்கு ஆட்டத்தில் விளையாடாத ஷமி, ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால் அணிக்குள் இடம் பிடித்து தான் விளையாடிய 6 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக திகழ்கிறார். மேலும் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷமி.
17 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி உலக சாதனையை படைத்துள்ளார். மிக குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மிச்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்துள்ளார் ஷமி . 70 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நான்காவது முறையாக ICC உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதியில் வெற்றி பெரும் அணியோடு வரும் ஞாயிறு அன்று கோப்பையை வெல்லும் முனைப்போடு இந்திய அணி இறுதி போட்டியில் விளையாடும்.