Specials Stories

நாட்டின் பெருமை – நாட்டு மாடுகள்

நாட்டு மாடுகள் என்பது நமது நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் பழமைக்கும் பெருமைக்கும் அடையாளமாக விளங்குபவை… இந்தியாவில் தோன்றிய மாட்டின வகைக்கு நாட்டு மாடுகள் என்ற பெயர் வழங்கப்படுகிறது…

முதுகில் திமிரும் திமில், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடன், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும் நாட்டு மாடுகள் கம்பீரத்தை அடையாளமாக மட்டுமல்லாமல் வீரத்திற்கும் அடையாளமாக விளங்குகின்றன.

நாட்டு மாடுகளும் அதன் கலப்பின மாடுகள் மிகுந்த வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளதால், வெப்பமண்டல நாடுகளில் கூட வளர்க்கப்படுகின்றன. தூய நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் வண்டி மாடுகளாகவும், பால் மாடுகளாகவும், இறைச்சித் தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இவற்றின் சாணமானது எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகள் இந்திய காட்டெருதுவில் இருந்து தோன்றியதாகவும், அதன் துணையினமாகவும் கருதப்படுகிறது

மட்பாண்டங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளின்படி ஏறக்குறைய கி.மு. 2000 காலகட்டத்தில் இந்த இனமானது எகிப்தில் இருந்தது என்றும், அது கிழக்கு அல்லது தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இவை சகாரா மற்றும் கீழமை ஆபிரிக்காவில் 700 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலத்தில் முதலில் இருந்ததாக கூறப்படுகிறது

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. இன்றைய சூழலில் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கவே நாட்டு மாடுகளின் வளர்ப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டு நாடுகளிடம் இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.

முற்காலத்தில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இருந்து இடம் பெயர்ந்து சென்ற மக்கள் தமது சொத்தாக எடுத்து சென்றது நமது நாட்டு மாடுகளை தான். கலப்பின பசுக்களின் பால் மன-நலனுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் என பல நிபுணர்கள் கூறுகிறன்றார்கள் !

நாட்டு மாடுகளில் சுமார் 75 வகைகளுக்கு மேல் நம் நாட்டில் இருந்ததாக கூறப்பட்டாலும் அவற்றில் சில மாட்டு வகைகளே இன்று இருக்கின்றன என்பது கவலைக்குரிய விஷயமே. அவற்றுள் சில மாட்டின் வகைகளை காண்போம்.

காங்கேயம் :
காங்கேயம் மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை! இம்மாட்டினங்களிடம் பல சிறப்புகள் இருக்கின்றன.

பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும். காங்கேயம் காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை.

காங்கேயம்

கடுமையான வெயிலிலும், பஞ்சக் காலத்திலும் கூட உணவின்றி நொடித்து போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை இந்த வகை மாடுகள். காங்கேயம் பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
இவற்றின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்.

ஹலிக்கார் :
தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து ஹலிக்கார் மாட்டினம் தோன்றியது என வரலாறு கூறுகிறது. இம்மாட்டினத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

ஹலிக்கார்

சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும்.
இம்மாட்டினங்கள் வேலை செய்யும் திறனுக்கு உரியது, குறிப்பாக வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை இந்த ஹலிக்கார் வகை மாட்டினங்கள்.

அம்ரிட்மஹால் :
அம்ரிட்மஹால் வகை மாடுகளுக்கு பென்னி மற்றும் சாவடி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.
இந்த மாடுகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவை.
இவை ஹலிகார் மாடுகளுடன் நெருக்கமான தொடர்புடைய மாட்டினமாகும்.

இந்த வகை மாடுகள் முற்காலத்தில் போர்க்களத்திற்கு போர்த் தளவாடங்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மாட்டினங்கள் ஆகும். இந்த காளைகள் அவற்றின் வேகம், உறுதி கொண்ட தேகம் ஆகியவற்றிற்காக குறிப்பிடப்படுகின்றன.

அம்ரிட்மஹால்

இந்த மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும். இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.

இந்த அம்ரிட்மஹால் வகை பசுமாடுகள் குறைந்த அளவே பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. எனினும் உழைப்புத் தேவைகளுக்காகவே மக்கள் இந்த வகை மாடுகளை பெரும்பாலும் வளர்த்தனர்.

கிலாரி :
மகாராஷ்டிராவின் சாத்தாரா மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களிலும், சாங்கலி போன்ற வட்டாரங்களிலும், கர்நாடகத்தின் பிஜப்பூர், தார்வாட், பெல்காம் போன்ற மாவட்டப் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
இந்த இன மாடுகள் அப்பகுதியில் உள்ள வெப்பமண்டல மற்றும் வறட்சி வாய்ப்புகளை தாங்கி வாழக்கூடியனவாக உள்ளன.

கிலாரி

மேலும் அங்கு கடினமான சூழலிலும் வேளாண் பணிகளை செய்யும் திறனை கொண்ட மாடுகளாக விளங்குவதால், உள்ளூர் விவசாய சமூகத்திற்கு உதவியாக உள்ளன. எனினும், அண்மைக் காலமாக இந்த இன மாடுகள் அதன் குறைந்த பால் கொடுக்கும் தன்மையால் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும் கிலாரி மாடுகளின் நடை வேகமாக இருக்கும்.

உம்பலாச்சேரி மாடுகள் :
இம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

உம்பாலச்சேரி

உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருப்பதுடன் அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்
வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது.

புலிக்குளம் மாடுகள் :
புலிக்குளம் என்பது தமிழ்நாட்டின் புகழ்மிக்க காளை மாட்டு இனங்களில் ஒன்றாகும். புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம். புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது நிருபிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக விரும்பி வளர்க்கப்டும் காளை இனமாகும். பெரிய திமிலும், கூரிய கொம்பும், சீறிப்பாயும் வீரியமும் மிக்க காளை இனம் இந்த புலிக்குளம் காளை இனமாகும்.

புலிக்குளம் காளை

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த புலிக்குளம் காளை. ஒரு புலியைக்கூட தன் கொம்பின் வலிமையால் குத்திக்கொன்றுவிடும் வலிமை பெற்றது என புகழப்படுகிறது. இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.

இவை மட்டுமல்லாமல், ஹரியானா, ஓங்கோல், புங்கனூர், சிந்தி, தார்பார்க்கர், வெச்சூர் என பல மாட்டு வகைகள் உள்ளன. இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் இந்த நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பாக விளங்குகின்றன.

நாட்டு மாடுகள், இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும், இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக மட்டுமில்லாமல் பண்டைய கலாச்சாரத்தின் பெருமையாகவும், நாகரிகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன.

நாட்டு மாடுகளுக்கு பாதிப்பு என்றால் அது தலைமுறைகளையே பாதிக்கும் வல்லமை கொண்டவை.

நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்வோம். நாட்டுமாடுகளை பாதுகாப்போம்…
நாடு மாடுகளின் பாதுகாப்பு மாட்டினத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமான பாதுகாப்பு..