Cinema News Interview Stories

எம்.எஸ்.பாஸ்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

MS-Baskar

குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ பட வெளியீட்டை முன்னிட்டு சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார்.

அப்போது அவருடைய சினிமா ஆசை எங்கிருந்து தொடங்கியது என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். நான் நாகப்பட்டினத்தில் உள்ள வேலிப்பாளையம் தேசிய ஆரம்ப பாடசாலை, தேசிய நடுநிலைப்பள்ளி, தேசிய உயர்நிலைப் பள்ளிகளில் படித்தேன். அங்கு படிக்கும் பொழுது ‘மாரியப்பன்’ என்பவர் எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்தார். அவர் ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவிற்காக நாடகங்கள் போடுவார். அப்போதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். அதில் சிறு சிறு வேடங்கள் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்.

அந்த சமயம் மாயவரத்திலிருந்து முத்தையா அண்ணன் என ஒருவர் வருவார். அவர் வந்து எப்படி நடிக்க வேண்டும் என எங்களுக்கு சொல்லித் தருவார். ஒரு ஆண்டு விழா முடிந்ததும் அடுத்த ஆண்டு விழா எப்போது வரும், எப்போது மேடையில் ஏறி நடிப்போம் என காத்திருப்பேன். பள்ளிப்படிப்பை முடித்து 1972ஆம் ஆண்டு சென்னை வந்துவிட்டேன். என்னுடைய சகோதரி ஹேமமாலினி மிகச்சிறந்த பின்னணி குரல் கலைஞர். அவர்களுடன் துணைக்கு போவேன். அப்போது டப்பிங் மீது தீராத ஆர்வம் உண்டானது.

The pandemic situation has taken us back to the old days, says MS Bhaskar |  Tamil Movie News - Times of India

அந்த சமயத்தில் சிவக்குமார் அண்ணன் நடித்த சிட்டுக்குருவி படம் டப்பிங் போய்க் கொண்டிருந்தது. சிறு வேடம் ஒன்றிற்கு டப்பிங் செய்வதற்கான ஆள் அன்று வரவில்லை. தேவராஜ் மோகன் என்பவர் தான் படத்தின் இயக்குநர். வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் இணை இயக்குநர். ஆளில்லாத சமயத்தில் என்னை பார்த்தவர்கள் நீ வந்து பேசு என்று என்னை அழைத்தார்கள். ஒரே டேக்கில் டயலாக் பேசி முடித்தேன். ஆச்சரியத்துடன் எப்படி ஒரே முயற்சியில் பேசி முடித்தாய் என்று கேட்டனர். வெளியில் உட்கார்ந்து அனைத்து கதாபாத்திரங்களின் வசனங்களையும் பேசிப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டனர்.

சாயங்காலம் கிளம்பும் போது சும்மா போகாத என்று கூறி இரண்டு 10 ரூபாய் ஒரு 5 ரூபாயை சம்பளமாக கொடுத்து வாழ்த்தினர். இப்படித்தான் எனது டப்பிங் வாழ்க்கை தொடங்கியது. நடிப்பும் இன்று வரை நல்லபடியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo